Wednesday, May 18, 2016

ஆயிரத்தில் ஓர் இரவில்....3

http://neidhal.blogspot.com/2015/12/1.html

http://neidhal.blogspot.in/2016/02/2.html


அமைச்சரே...... அந்தப் பெண்ணைக் கொலைசெய்தவன் அவள் கணவனே என்பது தெரிந்துவிட்டது; இவனது தவறு கடவுளாலும் மக்களாலும்  மன்னிக்கப்படும்; ஆனால் அந்தக் கொலையை செய்யத் தூண்டியது அந்தக் கள்வன்தான்; அவனுக்குத்தான் இந்தக் கொலைக்கான தண்டனையைக் கொடுக்கவேண்டும்; அவனை இன்னும் மூன்றே நாட்களுக்குள் கண்டுபிடித்துக் கொண்டுவாரும்; தவறினால் உமக்குச் சிரச்சேதம் நிச்சயம். ", என்று கட்டளையிட்டுவிட்டு அரண்மனைக்குச் சென்றுவிட்டான்.

'ஐயோ..... மீண்டுமா?! இந்தப் பெரிய பாக்தாத் நகரத்தில், ஆயிரக்கணக்கில் அடிமைகள் உள்ளனர், அந்தச் சிறுவன் சொன்ன அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி அந்தக் கொடூரனைக் கண்டுபிடிப்பேன்?! கடவுள்தான் எனைக் காக்க வேண்டும் ' என்றெல்லாம் பலவாறு யோசித்துக் கொண்டிருக்க, மூன்று நாட்கள் பறந்தோடி விட்டன.

கடைசியில், அரசனது மரண தண்டனையிலிருந்து தப்பமுடியாது எனத் தெரியவே, அவனது உற்றார் உறவினர் அனைவருக்கும் விடைகொடுத்துத் தயாராகினான்; அதே நேரத்தில், அவனது வீட்டு வாயிலில் அரசனின் காவலர்கள் வந்து சேர்ந்தனர், " மதிப்புக்குரிய மந்திரியாரை, அரசர் அழைத்துவரச் சொன்னார்; கொடுக்கப்பட்ட மூன்று நாட்கள் அவகாசம் முடிந்துவிட்டதாலும், அதற்குள் நீங்கள் அந்தக் கொலைகாரனைப் பிடிக்கத் தவறியதாலும், மரணதண்டனையை நிறைவேற்ற மன்னர் அழைக்கிறார் ", என்றனர்.

மந்திரியாரும் வெளிச்செல்ல எத்தனிக்கையில், அவரது கடைசி வாழ்த்தைப் பெற அவரது குழந்தைகள் வரிசையில் நின்றன; ஒவ்வொரு குழந்தையையும் கட்டியணைத்து உச்சி முகர்ந்து வாழ்த்தினார்; ஐந்தோ ஆறோ வயதாகும் கடைசிக் குழந்தையைக் வாரி எடுத்துக் கட்டிஅணைக்கையில் ஏதோ ஒன்று அவரது மார்பைக் மிக அழுத்த...... குழப்பத்துடன் பார்த்தார்; பின்பு கேட்டார், " என்னம்மா கண்ணே அது, உன் உடலில் ஏதோ அழுத்துகிறதே?!".

அவளும் வெகுளியாகப் பதில் சொன்னாள், " ஓ...அதுவா?!? அது ஒரு ஆப்பிள் அப்பா, நமது வேலைக்காரன் ரிகான் இரண்டு கழஞ்சுப் பொன் விலைக்கு என்னிடம் விற்றான் அப்பா".

 அதைக்கேட்டதும் அதிர்ந்துபோய் உடனே அவளது, உடையின் பையிலிருந்து விரைந்து ஆப்பிளை வெளியே எடுத்தார்; அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டார். இரண்டொரு நிமிடத்தில் சுதாரித்துக் கொண்டு, உடனே அந்த வேலைக்காரனை அழைத்துவரச் செய்தார். வந்தவனிடம் ஆப்பிளைக் காட்டி விசாரித்தார், " எங்கு கிடைத்தது என்று உண்மையைச் சொன்னால் நல்லது ", என்று மிரட்டிக் கேட்டார்.

" மன்னியுங்கள் மந்திரியாரே, நீங்கள் நினைப்பதுபோல் நான் எங்கும் திருடவில்லை; ஒருநாள் தெருவில், சில சிறுவர்கள் இதை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்; அவர்களில் ஒருவனது கையில் இந்த ஆப்பிள் இருந்தது; நான் பறித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்; அவனோ விடாமல் என்னைப் பின்தொடர்ந்துவந்து அவனது உடல்நலமில்லாத் தாய்க்காக, அவனது தந்தை இருவாரப் பயணம் செய்து, இதை பசராவிலிருந்து கொண்டுவந்ததாகப் பொய் சொல்லி ஏமாற்றி, என்னிடமிருந்து இந்த அப்பிளைப் பெறப் பார்த்தான்; ஆனால் அவனைத் துரத்தி விட்டுவிட்டு நான் இந்த ஆப்பிளைக் கொண்டுவந்தேன்; உங்களது சின்ன மகளிடம் இரண்டு பொன்கழஞ்சுக்கு விற்றேன் ", என்றான்.

அவனை, மந்திரி ஜாபியர் மன்னன் ஆரூணிடம் அழைத்துச் சென்றான்; அனைத்தையும் கேட்ட ஆரூண், மிக வியப்படைந்து சொன்னான், " இதைவிட ஆச்சரியமான ஒரு கதை இருக்கவே முடியாது; உங்கள் அடிமையின் தவறுக்கு நீங்களே தண்டனை கொடுங்கள் ", என்றான் மந்திரி ஜாபியரைப் பார்த்து.

" இதைவிட ஆச்சரியமான கதை இருக்கத்தான் செய்கிறது; சொன்னால் எனது அடிமைக்கு மன்னிப்புக் கிடைக்குமா? ", என்றார். 


No comments: