Wednesday, January 6, 2016

திங்கள் முகம்!

ஒரு 10 நிமிடங்களுக்கு முன்புதான் இந்துயிசம் பற்றிய எனது எண்ணங்களைப் பதிவு செய்தேன்-கோபத்துடன்! ஒரு பக்கம் கோபம் கொப்பளித்தாலும்..... மற்ற மனித உணர்வுகள் மழுங்கியா போகும்? இல்லையே!

வழக்கம்போல நம்பிக்கை தரும் எண்ணங்களைக் கொண்டுவர நான் தேடுவது என்னவோ புத்தகங்களைத்தான்.

சில நிமிடங்கள் புத்தக அலமாரியில் தேடி எடுத்தேன்.
புலவர்.கோ.பார்த்தசாரதி எழுதி, ராமையா பதிப்பகத்தார் அச்சிட்டு, 2009ல் முதற்பதிப்பாய் வெளிவந்த , "சிலம்பில் அரும்பிய சிந்தனைப் பூக்கள்" புத்தகத்தைப் புரட்டினேன். அப்போது கண்ணில் பட்டது....சிலப்பதிகாரத்திலிருந்து....

                       கயலெழுதி, வில்லெழுதிக் கார்எழுதிக் காமன்
                       செயலெழுதி, தீர்ந்தமுகம் திங்களோ காணீர்!
                       திங்களோ காணீர்! திமில்வாழ்நர் சீறூர்க்கே
                       அங்கண்ஏர் வானத்து அரவஞ்சி வாழ்வதுவே!

தலைவன் பாடுகிறான், தலைவியினைப்   புகழ்ந்து!


அவளுக்கிருப்பது,
கண்ணல்ல மீன்,
புருவமல்ல வில்,
கூந்தலல்ல கார்மேகம்,
முகமல்ல முழுநிலா.

அவளோ,
பெண்ணல்ல காதல்தேவதை;

வான்விட்டு, சிறு மீன்பிடிப் படகுகளும், மீனவரும் நிறைந்திருக்கும் இவ்வூருக்கு வான்மதி அவள் வந்துவாழ காரணம் என்ன?

நிலவை விழுங்குவதாய்ச் சொல்லும் பாம்பு, முழுநிலாப் போன்ற அவள் முகத்தை விழுங்கிவிடும் என்று அஞ்சியோ?

தன் மனம்பறித்த பெண்ணை நிலவோடு ஒப்பிட்டுப்பாடுவது ஒன்றும்
புதிதல்ல! ஆனால் இப்பாடல் எழுதப்பட்டதோ, கிட்டத்தட்ட 1500 வருடங்களுக்கு முன்!

ஏன், உங்கள் மனம்கவர்ந்த பெண்ணைப் பார்த்து நீங்கள் இப்போது இதைக் கவிதையாய்ச் சொல்லமுடியாதா என்ன? இல்லை, சொன்னால்தான் பிடிக்காமல் போகுமா? வெட்கம் வராமலா போகும்?!

முயற்சி செய்துதான் பார்க்கலாமே; ஏதோ ஒரு நேரம், முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, சற்றே யோசனையுடன், சொல்லிப்பாருங்களேன், "எனக்கு ஏனோ இப்ப திடீர்னு 1500 வருஷத்துக்கு முன்ன இளங்கோ பாடின பாட்டு ஞாபகத்துக்கு வருது!" னு சொல்லுங்க.

அவங்க, "ஏன், என்ன பாட்டு?!"னு கேட்டதும், பாட்ட சொல்லிட்டு, அதுக்கு விளக்கமும் சொல்லிட்டு...." இப்பக் கூட...."
அப்படியே திடீர்னு அமைதி ஆகிடனும், ஏதோ யோசிக்கற மாதிரி ஒரு அஞ்சாறு நொடி கண்ணமூடிக்கணும். அப்புறம்....

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....அவ்ளோதான் அதுக்குமேல வேண்டாம். பேச்ச மாத்திடுங்க pleaseeeeeee.

நேர சொல்ல உங்களுக்குக் கூச்சமா இருந்தா, ஒரு SMS...இல்ல...ஒரு whatsapp மெசேஜ்?!

1500 வருஷமானாலும் பழசாகாத ஒப்புமை இது!! இந்தக் காலத்துக்குப் பொருந்துமா-னு பார்ப்போமே! ;-)

படத்துக்கு நன்றி:
http://webneel.com/webneel/blog/25-beautiful-rural-indian-women-paintings-by-tamilnadu-artist-ilayaraja




No comments: