Wednesday, February 3, 2016

ஆயிரத்தில் ஓர் இரவில்....2

http://neidhal.blogspot.com/2015/12/1.html

தண்டனையைக் கேட்டதும் அமைச்சர் ஆடிப்போனார். அரசன் ஆரூண் அதோடு நில்லாமல், " உன்னை மட்டுமல்ல மந்திரியாரே, உன்னோடு சேர்த்து உன் நெருக்கமான உறவினர்  40 பேரும் கூடச் சிரச்சேதம் செய்யப்படுவர்."

மன்னன் கடுங்கோபத்தில் இருப்பது தெரிந்ததும், அமைச்சர் இழுத்தார், " அரசே.....கொஞ்சம் கால அவகாசம்..."

உடனே மன்னன், "மூன்றே நாட்கள்" என்றான்.

பதறினாலும், தாமதமின்றி அமைச்சர் காவலர்களுக்கும், மற்ற அதிகாரிகளுக்கும் ஆணை பிறப்பித்துத் தேடக் கட்டளையிட்டார். ஆனாலும் ஒரு பலனும் இல்லை. மந்திரியாருக்கு நம்பிக்கையே போய்விட்டது; மூன்றாம்நாளும் வந்தது. ஊர்ப் பொதுவிடத்தில், மக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்ற அரசன் ஆரூண் உத்தரவிட்டான். மந்திரிக்கு மக்களிடையே மிக நல்ல பெயர் இருந்தது; அனைவரும் வருந்தினர், ஆனாலும் அர கட்டளையை நிறுத்தும் வல்லமை யாருக்குமில்லை.

மரண தண்டனை நிறைவேற இருக்கும் நேரம் நெருங்கி வந்தது, அப்போது மக்கள் கூட்டத்திலிருந்து திடீரென ஒரு இளைஞன் முன்னே வந்தான், " என்னை மன்னியுங்கள் அரசே, நானேதான் அந்த கொடும் பாவச்செயலைச் செய்தவன். ஆகவே எந்தத் தவறும் செய்யாத மந்திரியாரை தயவு செய்து விடுதலை செய்ய வேண்டும்", என்றான்.

அனைவரும் அதிர்ந்து போய் நின்றனர்; அப்போது அக்கூட்டத்திலிருந்து திடீரென்று கிட்டத்தட்ட 50 அல்லது 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரும் வெளிவந்து, " இல்லை அரசே, அக்கொலையைச் செய்தது நான்தான்" என்றார்.

அங்கிருந்த அனைவருக்கும் இப்போது மேலும் அதிர்ச்சி.

இந்த இருவரில் யார் உண்மையான கொலையாளி? என்ற குழப்பம்.

அரசன் உடனே விசாரிக்கத் தொடங்கினான். இளம்பெண்ணின் சடலத்திலிருந்த அடையாளங்களை அந்த இருவருமே சரியாகச் சொல்லவே, இப்போது உண்மைக்குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வழிதெரியாமல் குழம்பினர்.

அதைக்கண்ட அந்த இளைஞன் ," அரசே, குழப்பம் வேண்டாம்! உடலில் இருந்த அடையாளங்களைச் சரியாகச் சொல்லிவிட்டார்! ஆனால் அவள் உடலைச் சுற்றி வைத்திருந்த சாக்குத்துணியின் நிறமும் அதைக் கட்ட உபயோகம் செய்த கயிற்றின் நிறமும் என்னவென்று அவரைக் கேளுங்கள் . அவளது சடலமிருந்த பெட்டியைப் பற்றியும் கேளுங்கள்; அப்பெட்டியிலருந்த பூட்டைப் பற்றியும் கேளுங்கள்", என்றான்.

அரசன் அதைப்பற்றி அந்த முதியவரிடம் விசாரிக்க, முதியவர் பெட்டி பற்றியும் பூட்டு பற்றியும் சொன்ன அடையாளங்கள்  பொருந்தாததால், கொலைசெய்தது அந்த முதியவரல்ல என்ற உண்மை தெரியவந்தது.

இப்போது  அரசன் ஆரூண், இளைஞனைப் பார்த்துக் கேட்டான்,..." அப்படியெனில், நீ சொன்னதுபோலவே, கொலை செய்தது நீதான்.  இந்த பெருங்குற்றத்தைச் செய்ததேன்? இப்போது நீயே வந்து குற்றத்தை ஒத்துக்கொண்டு தண்டனையேற்கத் தயாராயிருப்பதும் ஏன்?"

இளைஞன் சொன்னான், " மதிப்பிற்குரிய மன்னவனே, என்  கதை மற்றவர்களுக்கும் ஓர் பாடமாக இருக்கட்டும். கேளுங்கள்!"

" இவள், என் மனைவிதான்; என் மனைவி மட்டுமல்ல, இதோ இந்த முதியவருக்கு அவள் மகள் கூட. 11 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் திருமணம் நடந்து, மூன்று குழந்தைகளும் உள்ளனர். இத்தனை ஆண்டுகளில், ஒருமுறையும் என் மனம் கோணும்படி இவள் நடந்துகொண்டதேயில்லை.  எந்த வகையிலும் எனக்குக் குறைவைத்ததே இல்லை. நானும்  அவளை மிக அன்போடு பார்த்துக்கொண்டேன். அவளது விருப்பத்தை நிறைவேற்றுவதே எனது கடமை எனக்கொண்டு வாழ்ந்துவந்தேன்.

இரண்டு மாதங்களுக்கு முன் அவளுக்கு உடல்நலமில்லாமல் போனது. நானும் அனைத்து வகையிலும் முயன்று, மருத்துவம் செய்தேன்; ஒருமாத கழித்து  உடல்நலம் தேற ஆரம்பித்தது; அப்போது முதல்முறை அவள் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து, என்னிடம் அவளது ஒரு விருப்பத்தைச் சொன்னாள். ' எனக்கு ஆப்பிள் சாப்பிட வேண்டும்போல் இருக்கிறது; உங்களால் ஏதேனும்  முடியுமா? ', என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள்.

நானும் அவள் ஒருமாத  நோய்க்குப் பின், உயிர் பிழைத்து, வாய்திறந்து கேட்கும் முதல் விருப்பத்தை எப்பாடு  நிறைவேற்ற வேண்டுமென, ஊரெல்லாம், நாடெல்லாம், தேடியும் கிடைக்காமல், கடைசியில் உங்கள் அரசவைத் தோட்டக்காரன் சொன்னபடி, பசராவில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிந்து, இரண்டு வாரம் நில்லாமல் தொடர்பயணம் செய்து அங்கு சென்று விசாரித்தேன்; ஒரு பழத்துக்கு ஓர் பொன்கழஞ்சுக்குக் குறைந்து, அந்த அரண்மனைத்தோட்டக்காரன் தரவில்லை; அதே விலைக்கு மூன்று ஆப்பிள்களை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்; என் மனைவியும் அவற்றைத் தன் படுக்கை அருகிலேயே பொக்கிஷம் போல்
வைத்துக்கொண்டாள்.

இரண்டொரு நாளுக்குப் பின், நான் கடைத்தெருவில், என் கடையில் அமர்ந்திருக்கையில், அங்கே கரடு முரடான ஒருவன் கையில் ஆப்பிள்களுடன் போய்க் கொண்டிருப்பதைப்பார்த்தேன்;  பாக்தாத்தில் எங்கும் அப்பிள்கள் கிடைக்காது என்பது  எனக்குத் தெரியும்; எனவே கொஞ்சம் அதிர்ச்சி கலந்த ஆர்வத்துடன்  அவனிடம் ' அந்த ஆப்பிள் எங்கு கிடைத்தது? '-வென விசாரித்தேன். அவனோ ஒரு கள்ளப்புன்னகையுடன், ' இந்த ஆப்பிள்கள் என் காதலியின் பரிசுகள்; அவளைப் பலநாட்கள் இடைவெளிக்குப் பின் சந்திக்கச் சென்றேன்; அவளோ உடல்நலமின்றி இருந்தாள். அவளது படுக்கை அருகே இந்த ஆப்பிள்கள் இருந்தன; அவளது கணவன் இருவாரம் பயணித்து பசராவிளிருந்து இவற்றைக் கொண்டுவந்தானாம்; நான் அவளை மகிழ்விக்கவே, இந்த அப்பிள் எனக்குப் பரிசாகக் கிடைத்தது...' என்று சொல்லிக்கொண்டே ஓடித் தலைமறைவாகிவிட்டான். எனக்கோ அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை; உயிரே போய்விட்டதுபோல் இருந்தது; தலைசுற்றுவது போல் உணர்ந்தேன்; குழப்பத்தில் வியர்க்கத் தொடங்கியது; சந்தேகத்தில் இருப்பதைவிட,  உண்மையைத் தெரிந்துகொள்வது நலம் என்று எண்ணிக்கொண்டு, உடனே கடையை மூடிவிட்டு வேகமாக வீடுவந்தேன்; என் மனைவியைப் பார்த்து 'ஆப்பிள்களில் ஒன்றைக் காணவில்லையே, எங்கே?'-வென்று கேட்டேன். அவளோ சற்றுக் கலவரமடைந்த முகத்துடன், பதில் சொல்லத்திணறினாள்; அவள் தயக்கம் என் கோபத்தைக் கிளறியது; மேலும் மிரட்டிக் கோவத்துடன் கேட்டேன்; அவள் பயந்தவண்ணம் 'இங்குதான் வைத்திருந்தேன், ....ஆனால்....அதைக் காணவில்லை', என்றாள். கள்ளக்காதலனுக்குப் பரிசளித்துவிட்டு, என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது; உடனே அவளது கழுத்தை நெரித்துக் கொன்றேவிட்டேன்; அவள் இறந்ததும், உடலைக் கூறுபோட்டுத் சாக்குத்துணியில் வைத்து, தடிமனான, தரமான ஒரு சிவப்புக் கயிறால் கட்டி, பெரிய பெட்டி ஒன்றில் வைத்து, யாருமறியாவண்ணம்  இரவில் டைக்ரிஸ் ஆற்றில் விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அன்று இரவு, வீடு வரும்போது மூத்த மகன் மட்டும் வாசலில் உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தான்; அழுகைக்குக் காரணம் விசாரிக்க, ' மதிய உணவுக்குப் பின், அன்னை உறங்கிவிட்டாள்; அவளுக்குத் தெரியாமல் நானும் தம்பிகளும் ஒரு ஆப்பிளை எடுத்துச் சென்று நண்பர்களிடம் காட்டிவிட்டு  அதை வைத்துக் கொண்டு நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்தேன்; அங்கு முரட்டுத்திருடன் ஒருவன், அந்த ஆப்பிள்களைப்  பறித்துக்கொண்டான்; நான் அவனிடம் எவ்வளவு கெஞ்சியும் அவன் திருப்பித் தரவில்லை; நானும் அன்னைக்கு உடல்நிலை சரியில்லாததால், நீங்கள் பசராவுக்கு இரண்டு வாரக் கடும்பயணம் செய்து கொண்டுவந்ததையும் சொல்லிக் கருணைகொண்டு திருப்பித்தருமாறு பின்தொடர்ந்து சென்று கெஞ்சினேன்; எவ்வளவு தூரம் அவன் சென்றாலும் நான் பின்தொடர்ந்ததால், என்னை அடித்துப் போட்டுவிட்டு ஓடிமறைந்து விட்டான்; எவ்வளவு துரத்தியும் எங்களால், அவனைத் துரத்திப் பிடிக்கமுடியவில்லை... அப்பா என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா, தயவுசெய்து ஆப்பிள் காணாமல் போனதை அம்மாவுக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ளுவோம்; தெரிந்தால் அவள் உடல்நிலை மீண்டும் மோசமாகிவிடும். ' எனவும் கூறினான்.

அப்போதுதான், உண்மையில் நடந்தது என்னவென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஏதோ ஒரு தெருப்பொறுக்கியின் பேச்சைக் நம்பி என் அன்பான தூய்மையான மனைவியைச் சந்தேகித்ததோடு கொலையும் செய்துவிட்டதை நினைத்தால், மனம் வெம்பியது. ஆனாலும் சரி செய்ய முடியாத தவறைச் செய்துவிட்டதை, அவளது தந்தையிடம் சொல்லியழுதேன்; உண்மையை காவல்அதிகாரிகளிடம் சொல்லி தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் முடிவுசெய்தேன். ஆனால், அவரோ, ' நடந்தது மிகப்பெரிய தவறுதான்; உனக்கும், பிள்ளைகளுக்கும், எனக்கும் பேரிழப்புதான்; ஆனால் அதற்குத் தண்டனையாக நீயும் சரணடைந்தால், சிறையோ, தூக்கோ?! வயதான நானும் இறந்துவிட்டால், இந்தச் சிறுகுழந்தைகள் ஆதரவற்ற அனாதைகள் ஆகிவிடாதா? அவர்களுக்காகவாவது நீ உயிரோடு இருப்பது அவசியம்; நானோ வாழ்ந்துமுடித்தவன்; அந்தக் கொலையைச் செய்தவன் நாந்தான் என்று ஒப்புக்கொண்டு சரணடைந்துவிடுகிறேன்'-என்றார்.

எனக்கோ அதற்குத் துளியும் சம்மதமில்லை; தவறு செய்த எனக்குப் பதிலாக தவறே செய்யாத, வயதான ஒருவரைத் தண்டனைக்குள்ளாக்க என்மனம் இடங்கொடுக்கவில்லை; என்னை அவர் தடுத்தார்; அவரை நான் தடுத்தேன்; அனால் துளியும் சம்பந்தேயில்லாத, நமது மந்திரியார் பலியாவதைப் பொறுக்கமுடியாமல்தான் நானே அனைவர் முன்னிலையிலும் என் தவறை ஒப்புக்கொண்டு, தண்டனையை ஏற்றுக்கொள்ள முன்வந்தேன் ", என்றான்.

அதைக்கேட்ட அனைவரும் செய்வதறியாமல் திகைத்துப்போயினர்.

சிலவினாடி அமைதிக்குப் பின், அரசன் ஆரூணே பேசினான்; அமைச்சரை அழைத்தான்.

" அமைச்சரே...... அந்தப் பெண்ணைக் கொலைசெய்தவன் அவள் கணவனே என்பது தெரிந்துவிட்டது; இவனது தவறு கடவுளாலும் மக்களாலும்  மன்னிக்கப்படும்; ஆனால் அந்தக் கொலையை செய்யத் தூண்டியது அந்தக் கள்வன்தான்; அவனுக்குத்தான் இந்தக் கொலைக்கான தண்டனையைக் கொடுக்கவேண்டும்; அவனை இன்னும் மூன்றே நாட்களுக்குள் கண்டுபிடித்துக் கொண்டுவாரும்; தவறினால் உமக்குச் சிரச்சேதம் நிச்சயம். ", என்று கட்டளையிட்டுவிட்டு அரண்மனைக்குச் சென்றுவிட்டான்.


No comments: