Sunday, December 27, 2015

ஆயிரத்தில் ஓர் இரவில்....1


மாலை மங்கி இரவு கவிந்து கொண்டிருக்கும் நேரம். மேல்வானம் சிவப்பும், நீலமும், சாம்பலும், கருப்பும் பட்டைகளாய்த் தீட்டப்பட்டுக் காட்சியளித்தது. வீசும் காற்றிலோ இன்னும் வெப்பம் தங்கி இருந்தாலும், பகல் வெப்பத்தைவிட வெகுவாகக் குறைந்தே இருந்தது.

அரசன் ஆரூண் மந்திரி ஜாபியரையும், மெய்க்காவலனையும் அழைத்துக்கொண்டு மாறுவேடத்தில் நகர்வலம் தொடங்கினான். நாட்டிலே சட்டம், ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்று பார்த்து, மக்களின் நிறைகுறை கேட்டு அதற்குத் தக்கவாறு நீதிபதிகளைப் பாராட்டவோ, பணி நீக்கம் செய்யவோ முடிவு செய்திருந்தான்.

பல இடங்களிலும் சுற்றி வந்தனர்; தெருக்களிலும், சந்தைகளிலும் பார்வையிட்டனர். அப்படியே சிறு சந்து ஒன்றைக் கடக்கையில், ஒரு வயதான மீனவன் ஒருவன் கவலை தோய்ந்த முகத்துடன், ஒரு கூடையையும், மீன்பிடி வலையையும் எடுத்துக் கொண்டு எதிரே வந்து கொண்டிருந்தான். பார்த்தவுடனே அரசன் அவனது நிலை பற்றி விசாரிக்க முடிவு செய்தான். அருகில் வரும்போது மீனவனை நிறுத்தி ' யார், என்ன ' வென விசாரித்தார் மந்திரி.

மீனவன் கவலையுடன் சொன்னான், ' நான் ஒரு மீனவன். இன்று மீன் பிடிக்க மதியவேளையிலிருந்து முயற்சித்தும் ஏதும் கிடைக்கவில்லை. என்னையே நம்பி, வீட்டில் காத்திருக்கும் என் மனைவிக்கும், குழந்தைகளுக்கும் இன்று உணவுக்கு என்னால் எந்த ஏற்பாடும் செய்யமுடியாது போலிருக்கிறது'.

அதைக்கண்டு இரக்கம் கொண்ட, மாறுவேடத்தில் இருக்கும் அரசன் சொன்னான், ' இன்னும் ஒரே ஒரு முறை, உன் வலையை வீசி மீன் பிடிக்க முயற்சி செய்யமுடியுமா?! வலையில் எது கிடைத்தாலும் கிடைப்பதை எடுத்துக்கொண்டு, 100 பொற்காசுகள் தருகிறோம்'.

அவர்களைப் பார்க்க நம்பிக்கைக்குரியவர்கள் போல் தோன்றியதாலும், இன்னொரு முறை முயற்சி செய்வதால் இழப்பு ஒன்றும் இல்லை என்பதாலும், இந்த வழிப்போக்கர்கள் தர ஒப்புக்கொண்டதில் நூறில் ஒருபாகமான, ஒரே ஒரு பொற்காசு தந்தாலும் பலநாட்கள் குடும்பம் பசியாற முடியும் என்பதாலும், அதைக்கேட்ட மீனவன் ஒத்துக்கொண்டு டைக்ரிஸ் நதிக்கு வந்து மீண்டும் வலைவீசினான். சற்று நேரத்தில் வலையை வெளியே இழுக்க, பெரிய, கனமான பெட்டி ஒன்று மாட்டிக்கொண்டிருந்தது. அரசனும் 100பொற்காசுகளைக் கொடுத்துவிட்டுப் பெட்டியைப் பெற்றுக்கொண்டான். கனமாக இருந்த அந்தப் பெட்டிக்கு ஒரு பெரிய பூட்டு ஒன்றும் இருந்தது.

அரண்மனைக்குக் கொண்டுவந்து, திறந்து பார்த்தால்....அதில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று, தைக்கப்பட்ட ஒரு சாக்குப் பையில் இருந்தது.

அதைகண்டு கடுங்கோபமுற்ற அரசன், மந்திரியைப் பார்த்துக் கோபத்துடன் சொன்னான்,' என்ன அமைச்சரே இதுதான் நம் நாடு இருக்கும் நிலையா? அடையாளம் தெரியாத பெண்பிணம் ஆற்றிலே, பெட்டியிலே மிதக்கிறது நான் ஆளும் இந்நாட்டில்; இந்நாட்டுக் நீர் அமைச்சர்!?'

'இந்த பெரும் கொடூரத்தைச் செய்த கொலைகாரனை இன்னும் மூன்றே நாட்களில் கண்டுபிடித்து, இழுத்து வந்து என்முன் நிறுத்தாவிட்டால், உமக்கு சிரச்சேதம் செய்யப்படும். காரியம் ஆகட்டும் சீக்கிரம்; எண்ணி மூன்று நாட்கள் மட்டுமே. இப்போதே துப்புதுலக்கும் வேலையைத் தொடங்குகள்.' என்று அமைச்சருக்கு அரசன் கட்டளை இட்டான்.


No comments: