Saturday, December 24, 2016

சங்கத்தில் ஓர் முத்து !

சங்கத்தில் ஓர் முத்து !


நன்றி: http://c300221.r21.cf1.rackcdn.com/18-painting-of-ilayarajatamil-artist-1394383234_b.jpg


நீயும் தவறிலை, நின்னைப் புறங்கடைப் 
போதரவிட்ட நுமரும் தவறிலர் 
நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப்
'பறையறைந் தல்லது செல்லற்க' என்னா
இறையே தவறுடை யான்.


(நன்றி: http://www.garuda-sangatamil.com/pages/seventh/second01-10.php)
சங்கப் பாடல்களில் காதலையும் வீரத்தையும் தலையாய புலமாய் வைத்து ஆயிரமாயிரம் பாடலைகள் உள்ளன.

அகத்திணை 7 வகைப்பட, அவற்றுள் அன்பின் ஐந்திணைகள் தவிர...... கைக்கிளை பெருந்திணையும் கூட அகத்திணையிலேயே இடம்பெறுகின்றன.

கைக்கிளைக்கும் காதலுக்கும் உள்ள மிக எளிதான அடிப்படை வேறுபாடு - அன்பு ஒருதலையானதா, இல்லை இரண்டு உள்ளங்கள் ஒன்று பட்டதா என்பதைப் பொறுத்தது.

தலைவனின் உள்ளத்தில் மட்டுமோ, அல்லது தலைவியின் உள்ளத்தில் மட்டுமோ ஏற்பட்டு, அடுத்தவர் உள்ளத்தில் அதே அன்பு முன்னவர்பால் பிறக்காவிட்டால்..... அது அகத்திணையே ஆனால் கைக்கிளை.

அத்தகைய கைக்கிளை பாடல் ஒன்றின் வரிகள்தான் மேற்கண்டவை.

தலைவன் கூற்றாக அமைந்த வரிகள் இவை....



****************
நான் காதலில் வீழ்ந்தது....

உன்னுடைய தவறில்லை, உன்னை வெளியே
சுதந்திரமாய்ப் போகவிட்ட உன் பெற்றோரின் தவறுமல்ல....

மிகுதியான சேதம் தரும், மதம்கொண்ட யானையை நீரருந்த தெருவழியே குளத்துக்கு அனுப்பும் முன்..... .பறையறைந்து... 'ஆபத்து, தெருவில் செல்லவேண்டாம்' என எச்சரிக்கை செய்வர். அந்த யானைபோல் ஆபத்தான நீயும் தெருவழியே வருகையில், என்னை அப்படி எச்சரிக்கை செய்யாமற் போன.....

அரசனின் தவறே இது.
***************
கைக்கிளையின் கையறுநிலையை இத்தனை அழகாய் எடுத்துச் சொன்னது தமிழ்......2000 வருடங்களுக்கு முன். இன்றைய பல மொழிகளே பிறக்காத அந்நாளில்.

No comments: