நன்றி: விக்கிப்பீடியாவுக்கு.
இந்த இரு படங்களையும் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், நெருப்புக்குழியின் பக்கத்திலே ஆள் நிற்பது தெரியும். அந்த நெருப்புக்குழியின் அளவை ஒப்பிட்டுக் காட்டவே மனிதர்களுள்ள படங்கள். இந்த நெருப்புக் குழியின் அளவு...... சுமார் 70 மீட்டர் விட்டமும், 20 மீட்டர் ஆழமும் கொண்ட பள்ளம்.
விசயத்திற்கு வருவோம். இந்தக் குழி இருக்குமிடம், " தர்வாசா, அஹல் மண்டலம், துர்க்மெனிஸ்தான்". அந்த ஊர்(தர்வாசா)மக்கள் இந்நெருப்புக் குழிக்கு இட்ட பெயர்தான்-"நரகத்தின் நுழைவாயில்". பெயர் பயமுறுத்துவதாக இருந்தாலும், இதுவரை யாருக்கும் எவ்வித பாதிப்பும் இதனால் ஏற்படவில்லை என்பது ஆறுதலான செய்தி. இதில் அதிர்ச்சியளிக்கும் செய்தி ஏதுமில்லை, ஆனால்...
ஆச்சரியப்பட வைக்கும் செய்தி என்னவெனில், இக்குழியில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு 44 வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து கொண்டுள்ளது என்பதுதான். 1971ல் சோவியத் பொறியாளர்களால் இந்த இடத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் எரிவாயு மற்றும் பெட்ரோலியத்திற்காக ஆராயப்பட்டது. அப்போது இந்தக் குழி இருக்கும் இடத்தில், அருகில் இருப்பதுபோல் சமதளமாக, வெறும் தரைதான் இருந்தது. ஆராய்ச்சியில் எரிவாயுவோ எண்ணெய்யோ கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பது தெரிந்தது. நுண்துளைக் கிணறு ஒன்று தோண்டப்பட்டு, அருகே எரிவாயு சேகரிப்பு அறைகளும் கட்டப்பட்டு, எரிவாயு வெளியே எடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டது. திடீரென்று ஒருநாள் அந்தக் கிணறு இருந்த இடம், அனைத்துக் கட்டிடங்களுடன் பூமிக்குள்ளே புதைந்து போனது; அதோடு அந்த இடத்தில் வெறும் குழி மட்டுமே மிஞ்சியது. பயந்துபோன அப்பொறியியலாளர்கள், விஷவாயுக் கசிவு இருக்குமோ என்ற பயத்தில், அதைக் கட்டுப்படுத்தி எரித்துவிடலாம் என நினைத்துக் கொளுத்திவிட்டனர். அனால் அவர்கள் எதிர்பார்த்ததுபோல் 4 அல்லது 5 நாட்களில் நெருப்பு அணைந்துவிடாமல் எரிந்துகொண்டே இருக்கிறது. அத்தனையும் நல்ல எரிவாயுதான், விரையமாகிப் போய்க்கொண்டிருக்கிறது, ஏதும் உபயோகப் படாத நிலையில்.
இணையத்தில் பல இடங்களில் இதைப்பற்றிய செய்தித் தொகுப்பே கிடைத்தாலும், தமிழில் பதியப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான். பலநாட்களாய்ச் சொந்தச் சிந்தனையும் சரக்கும் மட்டுமே பதியப்பட வேண்டும் என்ற தப்பெண்ணத்தில் இருந்துவிட்டதுடன், இருக்கும் மிகக்குறைவான சொந்தச் சரக்கையும் கோர்வையாக எழுத்தில் கொண்டுவரப் பொறுமையோடு நேரமும் அவசியம் என்பதால், அதிகப் பதிவுகளை இடமுடியவில்லை. அதற்கு மாற்றாக மொழிபெயர்ப்புப் போன்றதொரு பதிப்பு, சொந்தச் சரக்கல்ல....கடன்தான்.
இந்த இடுகையைப் பின்பற்றினால், சிறு வீடியோ ஒன்றைக் காணலாம். மேலும் கூகுளில் பல இணைப்புகளையும் பெறமுடியும் என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியம் இல்லை....இருந்தாலும்....
நன்றி நண்பரே....மீண்டும் சந்திப்போம்......
thanks to youtube, wikipedia.