Wednesday, February 18, 2015

முத்தொள்ளாயிரம்....

நன்றி: http://www.wallspick.com/water-lilies-hd-wallpaper.html


                                       அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ 
                                       வெள்ளந்தீப் பட்டதென வெரீஇப்- புள்ளினந்தங்
                                       கைச்சிறகாற்ப் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
                                       நச்சிலைவேற் கோக்கோதை நாடு.


      முதற்காதல்   யாருக்குமே மறக்கமுடியாததாகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கையில் இப்பாடல்தான் தமிழ்மேல் அக்காதல்வரக் காரணம். ஆங்கிலமோ வேறு பல மொழிகளோ பிறந்தேயிராத காலத்தில் எழுதப்பட்ட பாடலாயினும் தமிழறிவேதும் அதிகம் இல்லாத எனக்குக்கூட  எளிதாக விளங்கிய பாடல் இது. பள்ளியில் படித்த வரிகள் மனதிலேயே தங்கிவிட, எந்தப் பாடல்தொகுப்பில் இது  இடம்பெற்றது என்பதுகூட நினைவில் இல்லை.தெரியவில்லை.

      சமீபத்தில்தான் பபாசி-யின் புத்தகத்திருவிழாவில்  ஏதோவொரு புத்தகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கையில் மீண்டும் இப்பாடல் கண்ணில் பட்டது; அப்போதுதான் தெரிந்தது இது முத்துள்ளாயிரத்தில் சேர நாட்டுச் சிறப்பைப் பாட வந்ததென்பது.






பொருள் இதுதான். சேறு நிரம்பிய குளங்களில் செவ்வாம்பல் ( செவ்வல்லி) அரும்புகள் மலர, அதைக்கண்டு குளக்கரை மரங்களில் வசிக்கும் பறவைக்கூட்டங்களில் தாய்ப்பறவைகள், "சிவந்து தெரிவதால், அக்குளத்து நீர்தான் தீப்பற்றி விட்டதோ" வெனப் பயந்து, குஞ்சுகளைத் தங்கள் சிறகினால் அணைத்துப் பாதுகாக்க முற்படுகையில் ஏற்படும் ஒலிதவிர வேறு கவலைகள் அறியாத நாடு நஞ்சுபூசிய வேல்தாங்கும் சேரனின் நாடு.

இன்றைய திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகள் மிக அருமை என்றாலும்.....கற்பனைக்கு முழு சுதந்திரம் கொடுக்கும் இப்பாடல், அகக்கண்களில் அருமையான கற்பனைக் காட்சியைத் தோன்றச் செய்ததே, இப்பாடலை என்றும் நினைவில் நிறுத்தியுள்ளது. அந்நாட்டகளில் தேனி-அரண்மனைப் புதூரில் இருந்து பள்ளி சென்றதும், முல்லையாற்றில் மீன் பிடித்ததும், ஆற்று வெள்ளத்தில் நீந்திப் புனல் விளையாடியதும், கரையோரம் விளையாடிப் பொழுது போக்கியதும், கூட்டாற்று மணலில் காற்று வாங்கியதும் தானாகவே நினைவில் வரும் ஒவ்வொரு முறையும். அந்தக் கூட்டாற்றில் மிதக்கும் நீர்ப்பூக்களும் அங்கு இரைதேடிப் பறந்துவரும்  பறவைகளும் இப்பாடலைக் கண்ணில் உண்மையாய்க் காட்டின.

        இப்பாடலை எங்களுக்குக் கற்பித்த தமிழாசிரியர் திரு.சந்திரசேகருக்கு நன்றிகள். இன்று அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கலாம்.

2 comments:

Anonymous said...

நண்பா இதைத்தான் நானும் வெகுநாட்கள் தேடினேன் கிடைத்து உன்மூலம் ..மகிழ்ச்சி ..வாழ்த்துக்கள்

ennangal said...

🙏😊💐👍🏼 எல்லா வளமும் கிட்ட வாழ்த்துகள் சகோ