செருப்பும் செயகாந்தனும்!..... இப்படி ஒரு பதிவுக்குத் தலைப்பு வைத்து அவமானப்படுத்துவதற்கு என்னை மன்னிக்கவேண்டும் - அனைத்து செருப்புகளும்!
என்ன செய்வது....செருப்பின் பிறப்பே அவமானப்படுவதுதானே! இந்தத் தலைப்பினால் செருப்பை சேற்றோடு சேர்த்து இன்னும் அதிகமாக அவமானப்படுத்திவிட்டேன்! அதனால் செருப்பிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
வலைப்பூவில் இந்தப் பதிப்பைப் படிக்க நேர்ந்தது!
/https://saravananagathan.wordpress.com/2015/04/11/என்றென்றும்-ஜெயகாந்தன்/
இன்றும் ஆங்கிலத்தில் மிகத் திறமையாக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் "அனைவரும்" அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ நியூசிலாந்திலோ ஆஸ்திரேலியாவிலோ அல்லது தென்னாப்பிரிக்காவிலோ பிறந்து..... ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லை.
ஆங்கிலத்தைக் இரண்டாம், மூன்றாம் மொழியாகக் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் சிறப்பாக எழுதத்தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
ஆங்கிலத்தில் எழுத மொழியறிவு மட்டும் போதுமே தவிர....மொழிப்பற்று?!
தேவையில்லையே!
******************************************************
எந்த மொழியிலும் எழுத்தாளனாக, ஆழமான மொழியறிவு மட்டுமே போதும். அம்மொழிமேல் பற்று இருக்கத் தேவையில்லை.
மனித உணர்வுகளுக்கு கொடுக்கப்படும் ஒலி/எழுத்து வடிவம்தான் மொழி. அவ்வுணர்வுகளை எந்த மொழியிலும் தெளிவாகவே வெளிப்படுத்த முடியும்....., அம்மொழியறிவு இருந்தால்.
பல மொழியறிவு இருந்தால், ஒரே உணர்வைப் பல மொழிகளிலும் வெளிப்படுத்த முடியும்.
சிலர் தமிழில் அதை வெளிப்படுத்தினர்..... மொழிப்பற்று துளியும் இல்லாமலே!
கதைகள் எழுதினர். பெரும் எழுத்தாளர்கள்-என்று பீற்றியும் கொண்டனர். அவர்கள் வாந்தி எடுத்தாலும், அதை "அமிர்தம்" என்று சொல்ல...., தடுக்கி விழுந்தாலும், "அது சர்க்கஸ் வித்தை" என்று சொல்ல...... மலம் கழித்தாலும், "அது மதுரம்" என்று சொல்ல......முன்பு எழுத்து-ஊடகத்திலும், இப்போது மேலும் தொலைக்காட்சிகள், வலைப்பூக்களிலும், மின்பதிவுகளிலும் ஒரு கூட்டம் எப்போதும் இருந்தது; இப்போதும் இருக்கிறது.
அந்தக்கூட்டம் எப்போதுமே, "அந்தக் கூட்டம் *மட்டும்* சொகுசாக வாழ எந்தக்கருத்துகள் உதவுமோ, அவற்றை மட்டும் தெய்வீகமாக்கியது!"
அந்தக் கருத்துக்களைப் பரப்பிய "அடிமை எழுத்தாளர்களை"...."அறிவு ஜீவிகள்" என்றது.
அந்த அடிமைகளுக்குப் பிச்சையிட்டு நன்கு வளர்த்தும் விட்டது. அடிமைகள் அழிந்து போனால், அந்த அடிமையினால் நடக்கும் வேலைகள் நின்று போய்விடுமே! அந்த அடிமை மேலும் பரப்பும் அடிமைக்கருத்துகள் பரவாமல் நின்றுவிடுமே!
அப்புறம், அந்த ஆண்டைகளாலும், அடிமைகளாலும் உருவாக்கப்பட்ட, கருத்துக்கோட்டைகள் தகர்ந்து விடுமே! அவ்வாறு நேராமலிருக்க, அந்தக் கருத்துக்கோட்டைகளுக்கு காவலிருக்கும், பாதுகாக்கும்.....மேலும் பல புதிய அடிமைக்கோட்டைகளை உருவாக்கும்.... மற்ற அடிமைக்களுக்கு பாதுகாப்பும், உணவும்......முக்கியமாகப் பாராட்டும் பரிசும் நன்றாகவே கிடைத்தன.
அக்கருத்துக்களையெல்லாம் "அப்படியே" ஏற்றுக்கொண்ட முட்டாள்களை, "நல்லவன்" என்றது. "பக்தன்" என்றது.
இந்தக் கூட்டம் எதைக் "கடவுள்" என்று சொன்னதோ, அதை மற்ற முட்டாள்களும் "கடவுள்" என்றனர்.
அந்தக் கூட்டம் எதை "அரக்கன்" என்றதோ, அடிமைக்கூட்டத்தினரும் அதையே "அரக்கன்" என்றனர்.
சமத்துவமில்லாத அக்கருத்துக்களை, ஏற்றுக் கொள்ளாதவர்களை..." அசுரர் " என்றது. "அரக்கர் குலம்" என்றது. "ஆத்திகன்" என்றது. "பாவிகள்" என்றது. "நரகத்தைக்" காட்டிப் பயமுறுத்தியது.
பயந்தவர்களும், பணிந்தவர்களும் அடிமைகள் ஆகிப்போனார்கள்- ஆனால் "மேல்சாதி, நடுச்சாதி " என்ற பெயரில்.
பெயரில் மேல்சாதி.....உண்மையில் கருத்து-அடிமை. சுயசிந்தனை இல்லாதவன் அடிமைதானே!
அந்த "மேல்சாதி/நடுச்சாதி" என்ற ஒற்றை வார்த்தை, அந்த அடிமைக்கூட்டத்துக்கு மேலும் ஊக்கம் தந்தது - இன்னும் சிறந்த அடிமையாய் இருக்க! அடிமைத்தனத்தைப் பாராட்டி எழுதி மேலும் அடிமைகளை உருவாக்க!
எதிர்த்து "ஏன்" என்று கேட்டவர்கள்- "அரக்கர்" என்று முத்திரை குத்தப்பட்டார்கள்.
அந்த "அரக்கர்"களை முன்பு கடவுளே அழித்து, வதம் செய்தது; இப்போது அதை "பக்தர் கூட்டம்" செய்கிறது. அப்படிக் கொலை செய்வதை...."பக்தி"..."தெய்வச் சேவை" என்றெல்லாம் இன்றும் எண்ணுகிறது! இந்தக் கொள்கை பரப்புச் செயலாளர்களின் செயல் அவ்வாறு எண்ண வைக்கிறது.
இப்படிப் பட்டதும்....இது போன்றதுமான அடிமைக் கருத்துகளைப் பரப்புவோரும்.....பாதுகாப்போரும்தான்..... மிகச்சிறந்த எழுத்தாளர்கள்.
இதுபோன்ற மதம், சாதிய ஏற்பாட்டால்...., பலனடைந்தோர் அதைப் பாதுகாக்க நினைப்பதும், பாதிக்கப்பட்டோர் மாற்ற நினைப்பதும் இயற்கைதானே!
எத்தகைய சமூக, பொருளாராதார, மத அமைப்பு....அனைவருக்கும் பாரபட்சமின்றி, ஏற்றத்தாழ்வின்றி, ஒரே, சம நீதி வழங்குவதாய் இருக்குமோ.... அதை நியாயமானவன் எவனும் ஏற்றுக்கொள்வான். பிறந்ததும் சமூகம் தன்னைத் தலைக்குமேல் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும்! தங்கத்தட்டில் சோறு தர வேண்டும்! தன் காலில் மொத்த சமூகமும் விழவேண்டும்! என எதிர்பார்ப்பவன்....ஏற்றுக்கொள்ள மாட்டான்.
வெள்ளைக்காரன் கூட விற்கத்தானே வந்தான்! வரவேற்றோம். ஆனால், செய்தது? வியாபாரமல்ல! நம்மை அடிமை ஆக்கினான்! அது தெரிந்து தெளிவு கொண்டோர், எதிர்த்துக் குரல் கொடுத்தனர்.
அந்த வெள்ளைக்காரனும் கூட, திறமையான அடிமைக்கு நல்ல கூலி கொடுத்தான். எதிர்த்த அடிமைக்குத் தூக்குமரம் பரிசு! இருவகை அடிமைகள்.
அவன் வருவதற்கு முன்பும், போன பின்பும்......சாதிய அடிமைகளிலும் இருவகையினர் இருந்தனர்;இருக்கின்றனர்.
அந்த அமைப்பை எதிர்த்த அடிமைகள்; அதையே போற்றிப்பாதுகாத்த அடிமைகள்.
இரண்டாவது வகை அதைப் பாதுகாக்கக் காரணம், ஒன்று 'அது கடவுள், மத ஏற்பாடு' என்று எண்ணியது(அவ்வாறு எண்ண தூண்டப்பட்டது); இரண்டு-சுயநலம்; 'எவன் எக்கேடோ கேட்டால் எனகென்ன! எனக்குச் சோறு கிடைத்தால்-சொர்க்கம்' என்ற எண்ணம். அதற்கெல்லாம் மேல்.... அத்தகைய அமைப்பால் கிடைத்த பலன்.
ஏற்றத்தாழ்வுகளுக்கு அடித்தளமாய் அமைந்தது சாதிய, மத ஏற்பாடு. அத்தகைய ஏற்பாட்டை....நேரடியாக இல்லாமல்.....மறைமுகமாகப் பாதுகாக்கும் விதமாகவே இந்தத் "தமிழ்ப் படைப்பாளிகளின்" படைப்புகள் அமையும்.
இவர்கள் காசுக்காக எழுத்து வியாபாரம் செய்தவர்கள். எது நன்றாக விற்றதோ அதை எழுதியவர்கள். அதன் மூலம் கருத்தடிமைகளைப் புடம்போட்டனர்.
காசுக்காக உடலை விற்பவள் "வேசி" என்றால்......
காசுக்காக எழுத்தை விற்றோரை....விற்போரை.... என்ன சொல்வது?!
வேசிக்கும் இவர்களுக்கும்.........
அடிப்படை ஒற்றுமை- சுயநலம். (சமூகம் நாசமாய்ப் போனாலும், எவன் செத்தாலும் பரவாயில்லை.)
முதல் நோக்கம்-பணம்.
ஆனாலும்....எழுத்தில் இதைத் தெளிவாக, வெளிப்படையாக, நேரடியாகக் காட்டிவிட முடியாதே. அப்படிக்காட்டினால், நல்லவன் வேஷம் கலைந்து விடாதா?! அதற்காக...... எழுத்தில் கொஞ்சம் நீலிக்கண்ணீர் கண்டிப்பாக இருக்கும். உடனே......
ஆண்டைகள் கூட்டம் பாராட்டத் தொடங்கிவிடும்!
முட்டாள்கள் கூட்டம் பரவசப்பட்டுவிடும்!
ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுதால்....அது பாசமில்ல; பசிக்குப் போடும் வேஷம். முதலைக் கண்ணீர்.
சமுதாயத்தில் அன்றும் இன்றும் விஷக்கருத்துகளை அந்தக் கூட்டம் தந்து கொண்டேதான் இருக்கிறது - தேன் கலந்து!
கம்பன், ஒட்டக்கூத்தனில் தொடங்கி.....கிவாஜ....கல்கி....புதுமைப் பித்தன்..... சுஜாதா...... சுந்தர ராமசாமி....ஜெயமோகன்.... ஜெயகாந்தன்.... டைரக்டர் சங்கர்.... விசு.... ஒய்.ஜி.மகேந்திரன்.... சோ.ராமசாமி.... எஸ்.வி.சேகர்..... என இந்தப் பட்டியல் இன்னும் நீளும்.
அனைவரின் படைப்பும் தமிழில்தான் - தமிழ்ப்பற்று இல்லாமல், ஆனால் பிராமணப் பற்றுடன்! தமிழர் வெறுப்புடன்!!!!!! பிராமணரோ, அல்லது பிராமண அடிமைகளோதான் இவர்கள் அனைவருமே.
ஆங்கிலம் கற்று ஆங்கிலத்தில் பலர் எழுதுவதுபோல் - ஆங்கிலப் பற்று மட்டும் இல்லாமல்...... இவர்கள் தமிழில் எழுதினர் - தமிழ்ப்பற்று இல்லாமல்.
இது மொழிக்கு சேவை இல்லை. பணத்தின், பாராட்டின் தேவை. அவ்வளவேதான்.
***************************
இவர்கள் அனைவருமே......"ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்"...... நாற்றமும் ஒரே மாதிரிதானே வரும் இவர்களிடமிருந்து!?
கவனம்.....அந்த நாற்றம் மல்லிகைப் பூச்செண்டோடு கலந்துதான் வரும்! மணத்தில் மனமும் மதியும் மயங்கி ஏமாந்துவிடப் போகிறீர்!
இந்தச் சமூகத்தில்,
வாசத்தை மட்டும் பாராட்ட அடிமைகளும் இருப்பர்.
நாற்றத்தைக் கண்டிக்க "அரக்கர்"களும் இருப்பர்.
இருபுறமும் சீர்த்தூக்கிப் பார்த்து, ஆய்ந்து முடிவுக்கு வருவதே அறிவார் செய்யும் செயல்.
அந்தக் கூட்டம் தரும்....
கதைகளும் கற்பனையும் - தேன்;
அனால், கலந்துள்ள கருத்து? - விஷம்!
பக்குவமாகக் கலந்து கொடுத்தால், படித்தவனும் குடித்துவிடுகிறான். கண்ணை மூடிக்கொண்டு குடிக்க முட்டாள்கள் தயராயிருக்கலாம்; கோப்பையில் இருப்பது தேனா? தேன் கலந்த விஷமா?! அல்லது விஷம் கலந்த தேனா? என தெரிந்துகொண்டு குடிக்க முடிவு செய்வதுதான் நலம்.
*****************************************************
பெரியார், செயகாந்தனைக் கேட்டாராம், " பிராமணப் பிள்ளையா?" என்று.
செயகாந்தன் சொன்னானாம், " இல்லை" என்று.
பெரியார் மனதிற்குள் எண்ணியிருப்பார், ' இது பிராமணப் பிள்ளையில்லை....பிராமண அடிமை' என்று! 'மேதாவி வேஷம் போடுகிறது' என்று! 'படித்த முட்டாள்' என்று!
பெரியார் மனதிற்குள் ஆயாசப்பட்டிருப்பார்....'இப்படிப்பட்ட படித்த அடிமைகளை எப்படித்தான் தெளியவைக்கப் போகிறோமோ!' என்று.
பெரியார் மனதிற்குள் நினைத்திருப்பார், 'படித்தவனே இப்படி என்றால்....படிக்காத பாமரனை என்ன சொல்ல முடியும்!' என்று.
பெரியார் மனதிற்குள் நொந்திருப்பார், ' படித்துத் தெரிந்து கொள்ள அத்தனை புத்தகங்கள் உள்ளன. படித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமோ, சிந்திக்கும் திறனோ இல்லாத, ஆனால் படிக்கத்தெரிந்த... இது போன்ற அடிமைகளையே திருத்த முடியவில்லை.....படிக்கவே தெரியாத பாமரனுக்கு தெளிவு தருவது முயல்கொம்போ?!' என்று.
************************************************************************
சாதி, மத எதிர்ப்பைக் காரணத்தோடு எதிர்த்த, நான் மனிதஉருவில் தெய்வங்களென்று வணங்கும் பெரியாரும் அண்ணாவும் எம் சாதியல்ல; அவர்களது கருத்துக்களும், மனிதமும்தான் எம்மை வணங்க வைத்திருக்கிறதே தவிர, அவர்களது சாதியல்ல.
நாம் மிக மதிக்கும்..... ஜீவாவாகட்டும், தா.பாண்டியனாகட்டும், நல்லகண்ணுவாகட்டும், சுப.வீயாகட்டும், கி.வீரமணியாகட்டும், கமலஹாசனாகட்டும்...எம் சாதியல்ல, ஆனாலும் எம் மனதில் மிகுந்த மரியாதைக்குரியோர். இவர்கள் மனிதத்தை முன்னிறுத்துவோர், மதத்தையும், சாதியையும் அல்ல.
************************************************************************
அந்த வலைப்பதிவர், செயகாந்தனை விவேகானந்தர், காந்தி மற்றும் மார்க்ஸ்சின் கலவை என்று பூஜை செய்திருந்தார்.
விவேகானந்தரைப் பற்றியும், காந்தியைப் பற்றியும் எமக்கு சரியாகத் தெரியாது.
ஆனால், மார்க்ஸ் மட்டும் செயகாந்தனின் எழுத்துக்களைப் படித்தால்....என்னைப் போல் செயகாந்தன் முகத்தில் காரித்துப்பியிருக்க மாட்டார். பெரியார் போலவே பொறுமையாகப் புன்னைகைத்துவிட்டு...... இதையும் சொல்லியிருப்பார்( தன் மருமகனிடமே சொன்னது போல்)..."if, what jayakanthan promotes, is marxism, then i am not a marxist" என்று.
இப்பதிவின் நோக்கம், செயகாந்தனையும் அவன் போற்றிப் பாராட்டிய, பதிலுக்கு அவனைப் போற்றிப் பாராட்டிய......ஏற்றத்தாழ்வான, பாரபட்சமான அமைப்பையும் முகத்திரை கிழிப்பதுதானே தவிர.....அந்த வலைப்பதிவரைக் குறை சொல்லுவதல்ல.
***************************************************************************
இந்த "அரக்கனின்" சொல்லில் நியாமிருந்தால்........ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால்....சுட்டிக்காட்டுங்கள், எங்கே தவறென்பதை!