உங்களுக்கு கோபாலய்யங்காரத் தெரியுமா!? தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைதான். சரி, நானே சொல்லிடறேனே.
அவர் தஞ்சாவூர் ஜில்லாவிலே டெப்டி கலக்டராக இருந்தவர். அப்புறம் அங்கும் இங்கும் வேலை பார்த்து, கடைசி வருஷங்களில் சென்னைக்கு வந்து செட்டில் ஆனவர். இப்போ இல்ல. 1920-30ல.
பெரிய திறமைசாலி. கணக்குல புலி. அறிவியல்ல சிங்கம். மருத்துவம் பிடிக்காது. ஏன்-னு கேட்டா, அதுக்கு நெறையப் படிக்கணும்; படிக்காம பாட்டிவைத்தியமெல்லாம் பண்ணக்கூடாது-ன்னு சொல்லிடுவாரு. ஆனாலும் ஊர்ல அப்போ இருந்த பல வைத்தியர்களைவிட, வைத்திய அறிவு அதிகமுள்ளவருதான்.
கல்லூரில படிக்கும்போதே ஆங்கிலத்துல கதை, கட்டுரை எழுதக் கத்துக்கிட்டாராம். ஆங்கிலம் கத்துக்கறதுக்காகத் தொடங்கின புத்தகம் வாசிக்கிற பழக்கம் அவரை சாகிறவரைக்கும் விடவேயில்லை.
இளவயசுல கூட மத்தவங்களப் போல இல்லாம, புத்தகமும் நூலகமும் கதி-ன்னு கெடந்தார் . பல வெளிநாட்டுக் கதைகளைச் சொல்லுவார், எப்போவாவது யாராவது 'என்ன படிக்கிறீர்?'-னு கேட்டால்.
ஏதேதோ சொல்லுவார்......'சமூகத்த மாத்தணும்....முன்னேத்தணும்....அமரிக்கா மாதிரி ஆக்கணும்..... இங்கிலாந்து மாதிரி மாறணும்.... பிரெஞ்சுக்காரங்க மாதிரி வளரனும்..... ஜப்பான் காரன் மாதிரி உழைக்கணும்.... ஜெர்மனிக்காரன் மாதிரி முன்னேறணும்.....ரசியா மாதிரி புரட்சி செய்யணும்.... பழைய முட்டாள்தனமான கருத்துக்களை எரிக்கணும்'-னு ஏதேதோ பினாத்துவார்.
நிறையப் படிச்சவர்; கலக்டராக இருந்ததால படிப்பறிவு அதிகம். படிப்பறிவு அதிகமா இருந்ததால கலக்டர் ஆனவர்-னு சொன்னா பொருத்தமா இருக்கும். . வெளியுலக அறிவு என்று சொல்வதைவிட... வெளிநாட்டு அறிவு அதிகம்-னு சொன்னா இன்னும் ரொம்பப் பொருத்தமா இருக்கும்.
அந்தக் காலத்திலேயே அவரு வெளிநாட்டுச் சமாச்சாரமெல்லாம் நெறைய தெரிஞ்சவரு. உலகப்போர்ல (முதல் உலகப்போர்) இருந்து....ரசியாவில் கம்யுனிசத் தத்துவம் வரைக்கும் எல்லாம் தெரிஞ்சவரு. அதனாலதானோ என்னமோ, அவருக்குக் கடவுள் நம்பிக்கையும் இல்லாமப் போச்சு. சாதி சம்பிரதாயப் பிடிப்பும் இல்லாமப் போச்சு. சாதிசனம்னு வித்தியாசம் பாக்காம, எல்லாருமே மக்க, மனுசருகதான்னு சமமாப் பாத்துப் பழகினவரு.
பலபேர் சொன்னதுண்டு, ' இந்த வறட்டுத் தத்துவம் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது'-ன்னு.
சிலர் சொல்லுவாங்க, ' வேற ஒண்ணுமில்ல... இளங்கண்ணு.. பயமறியாம இருக்கு'-ன்னு.
வேற சிலர் சொல்லுவாங்க, ' இப்போ எல்லாம் இப்படிதான் பேசுவாங்க, இளசா இருக்கும்போது. பின்னால குடும்பம், குழந்தை, குட்டின்னு வரும்போது மாறிடுவாங்க'-ன்னு.
இதுக்கு எல்லாத்துக்கும் மேல, அவங்கப்பா சண்முகசுந்தரம் அய்யங்காரே கொஞ்சம் காரசாரமாப் பேச ஆரம்பிச்சுட்டார், "நல்லாப் படிக்கானேன்னு பட்டணம் அனுப்பிப் படிக்க வச்சதுதான் என் தப்பு. என் தலைக்கே தீம்பா வந்து சேந்துட்டன் "னு பேசினார்.
அவங்க வீட்டிலேயே அப்படி பேச ஆரம்பிச்ச போதுதான், கொஞ்சம் படிப்ப மூட்டை கட்டி வைக்கணும்-னு முடிவு செஞ்சாரு! இல்லன்னா, அப்பா யாரோ முன்னப் பின்ன தெரியாத ஒரு பொண்ண கலியாணம் செஞ்சு வச்சிடுவாரோ-ன்னு பயம்.
அப்படி செஞ்சுவச்சிட்டார்னா, தான் காலேஜ்ல இருந்து கடைபிடிச்சிட்டு வர்றதா பெரும பேசிட்டு இருக்காரே "முற்போக்கு நாகரிகம் முற்றிலும் தெரிஞ்சவன் நான்-னு" , அந்தப் பெருமைய இழக்க நேரிடும்-னு நெனச்சார்.
அதுதவிர, கல்லூரில படிக்கிற காலத்துல சேக்ஸ்பியர்-னு பெரிய கதாசிரியராம். அவனோட புத்தகத்துல காதல்கதையெல்லாம் படிச்சிட்டு வந்து கனவு கண்டுக்கிட்டு இருப்பார். அதிசயமாப் பேசுவார்.
அப்படி பல கனவுக்கோட்டைகளைக் கட்டிவந்தவரு, காதல் கல்யாணம்தான் செய்யணும்-னு இருந்தார்;அது கலப்புத் திருமணமாகவும் இருக்கணும்; சீர்திருத்தத் திருமணமாகவும் இருக்கணும்னு பல கோணத்துல ஆராய்ச்சி செஞ்சு, வீரேசலிங்கம் பந்துலுகாரு வீட்டு வேலைக்காரப் பெண் மீனாட்சியின் மேல பரிதாபமோ, காதலோ அல்லது ரெண்டும் கலந்தோ வந்து, கல்யாணமும் செஞ்சுகிட்டார்.
மீனாட்சி அவர கணவரா நெனச்சதவிட, கண்கண்ட தெய்வமாதான் நெனச்சா. அவர் அவளை குழந்தையைப் பாத்துக்கிறதப் போல பாத்துக்கிட்டார்.
சரி, சரி. அவருதான் செத்துட்டாரே- 1950லயே! அவரப்பத்தி எதுக்கு இவ்வளவு பெரிய பிரசங்கம்?!
அவரோட பேரன் அசோக் என்னோட சீனியர்- ரெண்டு வருஷம் பெரியவர். இப்போ நான் வேலைபாக்குற கம்பனிலதான் அவர் 2005ல இருந்து வேலைபாக்குறார்.
போனவாரம் அசோக்கோட அப்பா- கோபாலய்யங்காரின் மகன்-அனந்தசயனம்-செத்துட்டார். ஊருக்கு காரியத்துக்கு நானும் இன்னும் சில நண்பர்களும் போயிருந்தோம்.
திருவாரூர்தான். பெருமாள் கோயிலுக்கு எதிர, வேளாங்குடி மெயின் ரோடு போகுதே, அதுலதான் வீடு. பெரிய அக்கிரஹாரத்து வீடு. தாமரைக் குளமும், பெருமாள் கோயில் குளமும் கூப்பிடற தூரம்தான்.
அசோக்கோட அப்பா அனந்தசயனம் 75 வயசுலதான் பகவான் மேல பாசத்துல மேலோகம் போய்ச் சேர்ந்தார். வயசான காலத்துல பரம்பரை வீட்டுலயே வந்து தங்கிட்டார். சென்னைவாசியா இருந்தாலும், பரம்பரை வீடு அவரை ஒரு கர்நாடகமாவே மாத்திருச்சு.
அனந்தசயனத்தோட அப்பா - அசோக்கோட தாத்தா- கோபாலய்யங்கார் மிச்சம் வச்ச ஒரே பரம்பரை சொத்து அந்த வீடுதான். மிச்ச சொத்தை எல்லாம் ஊர்ப் பொதுக்காரியத்துக்கே செலவழிச்சிட்டார்; அழிச்சிட்டார்னுகூட சொல்லலாம்.
விஷயத்துக்கு வருவோமே. அந்த வீட்டைப் பாக்கவே பிரமிப்பா, பிரம்மாண்டமா இருந்தது. அங்க இருந்த ரெண்டு நாளும் ஒவ்வொரு அறையா சுத்திச் சுத்திவந்தேன். அவர் ஒரு பெரிய நூலகமே வச்சு பராமரிச்சு இருக்கார். ரெண்டுநாளும் அங்கயேதான் இருந்தேன்.அசோக், அப்பாவோட காரியத்துல கொஞ்சம் அதிக வேலையா இருந்ததாலே, தொந்தரவு கொடுக்க வேண்டாமே-னு, அப்படியே புத்தக அறைக்குள்ள நுழைஞ்சு துளாவிட்டு இருந்தேன்.
அப்போதான் அந்த டைரி கண்ணுலபட்டுது. கோபாலய்யங்காரோட அந்தரங்க டைரிதான். புத்தகம் படிக்கறதுல இல்லாத ஆர்வம், சொந்தப் புராணம் படிக்கறதுல வந்துது. புத்தகமெல்லாம் பெரும்பாலும் கற்பனைக்கதை; ஆனா டைரி உண்மையான கதை சொல்லுமே.
ஒவ்வொரு பக்கமாப் புரட்டிப் பார்த்தப்போ அவர் செஞ்ச நல்ல காரியங்களோட லிஸ்ட் மாதிரி இருந்தது. கொஞ்சம் சலிப்பே வந்தது. 'காந்தியைவிட பெரிய்ய்ய்ய்ய்ய தியாகியா இருப்பாரோ?'ன்னுகூட ஒரு சமயம் தோணிச்சு.
1940ஆம் வருஷம் நவம்பர் டைரிலதான் கொஞ்சம் சுவாரசியமான, ஒரு சின்ன விஷயம், ஒரு சின்ன அதிர்ச்சி வெடி தெரிஞ்சுது. அப்புறம் கொஞ்சம் கவனமாப் படிச்சப்போதான் தெரிஞ்சுது. அது வெடி இல்ல. அணுகுண்டுன்னு!
கோபால் அப்போ சென்னையில இருந்திருக்கார்-1940ல. அப்போ அவரோட வீட்டம்மா மீனாட்சி பிரசவத்துக்காக(அனந்தசயனம் பொறந்தது அந்த நவம்பர்லதான்) அம்மா வீட்டுக்குப் போயிருந்திருக்காங்க.
கலக்டர் கோபால் கொஞ்சம் மும்முரமாகவே சமுதாய முன்னேற்ற வேலைகள்ல ஈடுபாடு காட்டி இருக்கார். அவரோட காரியதரிசி, சமையல்காரர், தோட்டக்காரர், பரிசாரகர் சுப்புவையர்வேற வாய்ப்புக் கிடைத்ததும் விடுப்புல கெளம்பிட்டார். கலக்டர் கோபால் தனியாவே சமாளிச்சுட்டு இருந்தார்.
மத்தியான வேளை, அன்னிக்கு சனிக்கிழமை; கொஞ்சம் வேலை அதிகமா இருந்ததால, அரை நாள் ஓய்வு எடுத்துக்கலாம்ன்னு 3 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்தார். கலக்டருக்கு மனுக்கொடுக்க, வழக்கத்தை விட கூட்டம் கொஞ்சம் அதிகமா இருந்தது.வழக்கமே அதிகமாதான் இருக்கும்.
வீட்டுக்கு வந்தவர், முகம் கழுவிட்டு, வாங்கி வந்த பார்சலில் பசியாறிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்துகிட்டு கட்டிலில் சாய்ஞ்சார்; படிப்புதான் அவருக்கு தூக்க மருந்தும்கூட.
பாதி தூக்கமா இருக்கும் போது, யாரோ வாசல் கதவை தட்டிக் கூப்பிடற சத்தம் கேட்டதும், திடுக்கிட்டு முழிச்சார்.
உள்ள இருந்தே குரல் கொடுத்தார், "யாருங்கோ, என்ன வேணும்?"
பதில் வந்தது, "ஐயா, உங்களைப் பாக்கதான்!", பெண்குரல்.
இவருக்கோ தூக்கம் கலைந்ததில் வழக்கத்துக் மாறா கொஞ்சம் எரிச்சல்; அனாலும் படுக்கையிலிருந்து எழுந்துகொண்டே கேட்டார், "ஏங்க, வீட்டுல வந்துமா மனுக்கொடுக்கணும், காலைல ஆபீசுல கொடுத்திருக்கலாமே!?"
இடுப்பு மடிப்பைச் சரி செய்துகொண்டே வாசலுக்கு வந்து கதவைத் திறந்தார். இளம் பெண் ஒருத்தி, தயக்கத்தோட, ரொம்ப தூரம் நடந்து வந்த களைப்போட, கையில ஒரு செய்தித்தாளும், இன்னும் சில கவரோடவும் நின்று கொண்டிருந்தாள்.
இவரைப் பார்த்ததும் வணக்கம் சொன்னாள்.
கழுத்திலே மஞ்சள் கயிறு, திருமணமானவள் என்பதைச் சொல்லிற்று; கொஞ்சம் கசங்கி, அழுக்காயிருந்த உடை வறுமையைக் காட்டியது; உடலோ இளமையைக் காட்டியது. வாடின முகமாயிருந்தாலும், பசியோ, வறுமையோ, களைப்போ மேலிட்டுத் தெரிஞ்சாலும், அழகைக் கொஞ்சம்தான் குறைக்க முடிஞ்சது; மழைக்காலத்திலே பூர்ண சந்திரனை, எப்போதாவது மேகம் மறைத்தாலும், நிலவின் அழகு குறைந்தா போய்விடும்? ரோஜாப்பூ அழகுதான், ஆனாலும் வாடிப்போகாமலேயேவா இருக்கிறது?
அவளது முகத்தில் தெரிந்த கலவரம், இப்போது அவரது கவனத்தையெல்லாம் அவரது பேச்சில் கொண்டுவந்து நிறுத்தியது.
"என்னம்மா? என்ன விசயமா வந்து இருக்கீங்க? யாரு நீங்க?", கொஞ்சம் பிரச்சினையைத் தெரிந்துகொள்ளும் அக்கறையோடு கேட்டார்.
" அதுங்க, எம்பேரு கமலா. நான் காலைலயே உங்க ஆபீசுக்கு வந்தேனுங்க, ஆனா உங்க காரியதரிசிக்குக் கொடுக்க காசு இல்லாததாலயும், கொஞ்சம் தாமதமா வந்ததாலேயும், உங்களைப் பார்த்து மனுவைக் கொடுக்க முடியாமப் போச்சு. அவரு வழக்கம்போல 20 மனுவை வாங்கிட்டு நிறுத்திட்டார். கொஞ்சம் அவசரமான, முக்கியமான மனு.அதான் வீட்டுலையே உங்களை நேரப் பார்த்துக் கொடுத்தே ஆகவேண்டிய நிலமைங்க "; இதைச் சொல்லி முடிப்பதற்குள், கண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது; கதர்ச் சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள்.
இவருக்கோ தர்மசங்கடம். அதுவும் வாசலிலேயே இவள் இப்படி அழுது கொண்டு நிற்பதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்களோ. 'கலக்டர் வீடுதேடி உதவிகேட்டு வந்தோரை, வாசலிலயே நிற்கவைத்துப் பேசி அனுப்பிவிட்டார்'னு பேசுமே உலகம்னு ஒரு நொடி தோன்றியது. இருந்த அரைகுறைத் தூக்கம் முழுக்கக் கலைந்தே விட்டது.
"மொதல்ல உள்ள வாங்கோம்மா, வாசல்ல நின்னு அழுதுட்டு இருக்காதீங்கோ", கொஞ்சம் கடிந்துகொண்டே சொன்னார். வாசலை விட்டு விலகி, உள்நோக்கி நடந்தார். அவளும் தயங்கி உள்ளே நுழைந்தாள்.
"உக்காருங்கோ", ஒரு நாற்காலியைக் காட்டினார், எதிரே அவர் அமர்ந்து கொண்டே; மேல் சட்டையை அணிந்துகொண்டிருந்தார்.
தயங்கினாள். சுற்றும் முற்றும் பார்த்தாள், யாரும் இல்லையோவென?!.
"பரவால்ல, உக்காருங்கோ; இங்க உங்ககிட்ட இலஞ்சம் வாங்க, சுப்பு இல்லை; சங்கரனும் இல்லை. கவலைப்படாதீங்கோ; அந்த மனுவைக்கொஞ்சம் கொடுங்கோ ", எட்டி வாங்கிக்கொண்டார்.
படித்துவிட்டு நிமிர்ந்தார், " இந்தப் போட்டிக்கு இன்னும் பரிசு அறிவிக்கல்லே! கொஞ்சம் நாளாகும் போலிருக்கே அம்மா! அந்தக் குழுவுக்கு மணிகண்டையரைத்தான் தலைவராப் போட்டிருக்கேன். கேட்டு சொல்றேன் திங்கட்கிழமை. நீங்க அந்தப் போட்டிக்கு என்ன பேர்ல கதை எழுதி அனுப்பியிருக்கேள்? "
"நான் இல்லைங்க, என்னோட வீட்டுக்காரர்தான்".
"ஓ. சரி சரி. கேட்டுச் சொல்லுறேன். ஆனா அதுக்கு இப்போ என்ன அவசரம் ?!", யோசனையோடு கேட்டார்.
கொஞ்சம் தயங்கினாள்; பேசத்தொடங்கினாள், " என்னோட கொழந்த ஒடம்பு சரியில்லாம இருக்காங்க. வீட்டுக்காரருக்கு உருப்படியா நிரந்தரமா ஒரு வேலையும் இல்ல; வருமானம் இல்ல. இப்படி கதை எழுதி ஏதாவது காசு வந்தாதான் உண்டு. இந்த நேரத்துல கையில காசு வேற இல்ல...அவளை எப்படிக் காப்பாத்தப் போறேன்னு தெரியல....!", தேம்பி அழத்தொடங்கினாள், குழந்தையின் ஞாபகத்தில்.
புலம்பல் தொடர்ந்தது...." மூணு நாளாக் காய்ச்சல் வர்றதும் போறதுமா இருக்கு... ஒழுங்க சோறு எறங்க மாட்டேங்குது. இந்த மனுசன் காசு இல்லாம, ஒவ்வொரு புத்தகம் போடுற அச்சாபீசுக்கும் நடையா நடந்து செருப்பு தேய்ஞ்சதுதான் மிச்சம். சல்லிக்காசுக்கு உருப்படி இல்ல. பாவம் எம்புள்ள. ஒரே பொண்ணுங்க....ஒரே பொண்ணு....என்னாகப்போகுதோ தெரியலையே...", கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டியது.
பேசிக்கொண்டிருந்தவள் திடீரென பேச்சை நிறுத்தினாள். அதுவரை தலைகுனிந்து தரை பார்த்து அவள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார். அதுவரை வந்த புலம்பல் திடீரென்று ஒரு சத்தமுமில்லாமல் நிறுத்தப்பட்டதும், அவரை ஏறிட்டுப் பார்க்கச் செய்தது.
அவளது கண்கள் குழன்று, அரைமயக்கம் அடைந்திருந்தாள். அப்படியே நாற்காலியில் சாய்ந்துவிட்டிருந்தாள். பேச முயற்சிப்பதும் தெரிந்தது.நிலைப்படுத்திக் கொள்ள தட்டுத்தடுமாறி கைகளால் பற்றிக்கொள்ள முயற்சிப்பதும் தெரிந்தது.
அதீத மன உளைச்சலும், கிட்டத்தட்ட 12 கல் தொலைவு கலக்டரின் ஆபீசிலிருந்து வீடு வரை குதிரைவண்டிக்குக் காசு இல்லாமல் நடந்தே வந்ததும் அவளால் தாங்க முடியாத சுமை தர, தாளாமல் மயக்கமடைந்து விட்டாள். ஆனால் கோபாலுக்கோ இது தெரியவில்லை.
கோபாலுக்கோ என்ன நடக்கிறது என்பதே புரியாத நிலை. கொஞ்சம் விதிர்த்துத்தான் போய்விட்டார். அப்புறம்தான் மூச்சு வருவதை கவனித்தார்; கையைப் பிடித்து நாடி துடிப்பதையும் உறுதி செய்துகொண்டார்; மூக்கினருகே விரல் வைத்து மூச்சு வருகிறதாவெனவும் உறுதிப்படுத்திக்கொண்டார். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது தெரிந்ததும்தான் அவருக்கே கொஞ்சம் மூச்சு சீரானது; அதுவரை பதறிப் போய், கொஞ்சம் மூளைக்கு வேலைகொடுக்காமல் பயந்துதான் போனார். ஆனாலும் இப்போது புதுத் தொல்லை....இந்தப் பெண்ணுக்கு என்னவானதோவென?!
மறுபடி கவனித்துப் பார்த்தார். கொஞ்சம் வியர்வைத் துளிகள் நெற்றியில் தெரிந்ததும் ஓடிச்சென்று மின்விசிறியை உச்ச வேகத்தில் வைத்தார். அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி நின்றார். மீண்டும் கவனித்துப் பார்த்தார். சீராக மூச்சு வந்துகொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் தனது பதட்டத்தைக் குறைத்துக்கொள்ள முயற்சி செய்தார்.
தண்ணீர் தாகம் எடுத்தது அவருக்கு.
தண்ணீர்! தண்ணீர்? ஆமாம். குளிர்ந்த தண்ணீரை முகத்தில் தெளித்துப் பார்க்கலாமே என்று தோன்றியது. ஓடிச்சென்று ஒரு குவளைத் தண்ணீரைக் கொண்டுவந்தார். வலக்கையில் கொஞ்சம் நீரெடுத்து முகத்தில் தெளித்தார். பெரிதாய் ஒரு மாற்றமும் தெரியவில்லை. இன்னும் இருமுறை அப்படியே தெளிக்க, கொஞ்சம் முகம் சுளிப்பதும், உதடுகள் அசைவதும் தெரிந்தது.
அவரும் கத்தினார், " என்னங்க, என்னங்க....என்னாச்சுங்க, என்னாச்சு... கொஞ்சம் கண் முழிச்சுப் பாருங்க. என்னங்க?!"
கெஞ்சிப்பார்த்ததில் சிறு சிறு உதட்டசைவு தவிர வேறெதுவும் தெரியவில்லை. இப்போது வேறுவழியில்லாமல், அவளது கன்னத்தைத் தட்டிவிட்டுப் பார்த்தார்; முகவாயைப் பிடித்து கொஞ்சம் இடதும் வலதுமாய் உலுக்கிப் பார்த்தார். பலன்தான் பெரிதாக இல்லை. இப்போது அவருக்கு கொஞ்சம் அதிகமாகவே பயம் வந்தது; பயம்-வேறு யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்களோ, என்ன பழி விழுமோ என்ற பயம்தான் அதிகமாக இருந்தது. என்னாயிற்றோ இவளுக்கு என்ற பயமும் இருந்தது-கொஞ்சம்.
சிறிதே தெளிவில்லாமல் முனகத் தொடங்கினாள்...."தினா..."... ..." சாப்பிடும்மா.... "... "தினா....." .....".... என்னாச்சு....தினா....வாந்தி வருதா?...".... ".. ..தினா....."..... சில வினாடி.....அமைதி....அப்புறம்....வலியிலோ வேதனையிலோ புரியாத முனகல்....திரும்ப..."...எப்படி காப்பாத்த போறேனோ!....எம்மாடி....என்னாச்சும்மா?"...."தினா...."
கொஞ்சம் பேசுவது புரிய ஆரம்பித்ததால் கோபாலுக்கும் பயம் கொஞ்சம் விலகியிருந்தது. இப்போது அவளைப் பார்க்கப் பரிதாபம் தோன்றியது. யாரோ இவள்! ஏனிந்தக் கஷ்டமோ! என்று நினைத்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
மேல் துண்டு ஒன்றைக் கொண்டு வந்து முகத்திலிருந்த நீரைத் துடைத்துவிட்டார். இப்போது அவள் முகம், துலக்கிய வெள்ளிப் பாத்திரம் போல் தெளிவாயிருந்தது.
எந்தக் கருணையுள்ளம் மீனாவுக்கு வாழ்க்கை கொடுத்ததோ அதே கருணையுள்ளம் இப்போதும் தலையெடுத்தது. மனைவியைப் பிரிந்து மூன்று மாதத்துக்கும் மேல் இருப்பதால் இது நேர்ந்ததா என்பது நமக்குத் தெரியாது.
அவளுக்கு உயிருக்கு ஆபத்தில்லை; ஆனால் ஏதோ மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறாள் என்பது தெளிவானது கோபாலுக்கு. உதவி செய்ய முடிவு செய்தார்; சாதாரண மனிதாபிமானம் மட்டுமின்றி, அவளது அழகு அவரைப் பெரிய உதவியாகச் செய்யத் தூண்டியது.
கொஞ்சம் உள்ளம் தடுமாறினார்; அவளைப் பார்ப்பதைத் தவிர்க்க நினைத்தார்; அனால் அவளது முகமோ மேலும் மேலும் பார்க்கத் தூண்டியது; உதவி என்று வந்து நிற்கிறாள்; என்ன உதவலாம் என்று நினைத்தார்.
ஏதோ யோசித்தவர், உள்ளறையில் புகுந்து, சில நிமிடத்துக்குப் பின் மீண்டும் வெளியே வந்தார். இப்போது அவரது கையில்- ஒரு வைர மூக்குத்தி. மீனாவுக்கு வளைகாப்புக்கு பரிசளிக்க வாங்கியது. இப்போது உதவியாகப் போகிறது.
சிறிது தயங்கினார்; இரண்டொரு முறை ஏதேதோ சொல்லிக் கூப்ப்பிட்டுப் பார்த்தார்; புரியாத முனகல் மட்டுமே பதிலாக வந்தது.
இப்போது ஒரு முடிவுக்கு வந்தார். அவரே அந்த மூக்குத்தியைப் போட்டு விடுவதென முடிவெடுத்துவிட்டார்.
போட்டாயிற்று.
செப்புச் சிலைக்கு முழுநிலவே முகமாய் அமைந்தது போல் இருந்தது அவளைப் பார்க்க. அதில் அந்த மூக்குத்தி, மெழுகு வெளிச்சத்தில் சிறு நட்சத்திரமாய் மின்னியது அவள் மூக்கில்.
அரைநாழி கழிந்திருக்கும். மயக்கம் தெளிந்து, பதறியடித்துக் கொண்டு எழுந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு எதிரே அமர்ந்திருந்த கோபாலும் அமைதியாக எழுந்தார். அவரைப் பார்த்ததும், திடுக்கென சேலைத் தலைப்பை எடுத்துச் சுற்றிக் கொண்டு,..." மன்னிக்கணும் ஐயா....என்ன நடந்ததுனு தெரியல....உதவி கேட்கத்தான் வந்தேன்..... அந்த கதைப்போட்டியில என்னோட வீட்டுக்காரருக்கு பரிசுத்தொகை கொடுக்க முடிந்தால், என் மகள் உயிரைக் காப்பாத்த முடியும்...நீங்க பாத்துதான் ஏதாவது செய்யணும்..."
அவளுக்கு மயங்கியதோ.....தெளிந்ததோ....எதுவும் நினைவில் இருப்பதாய்த் தெரியவில்லை.
அமைதியாய் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த கோபால், இப்போது இரண்டடி முன்னே வந்தார், அவளோ ஓரடி பின்னே சென்றாள்.
"கொஞ்சம் நில்லேன்", அவர் மெழுகாய் உருகினார்.
அவளுக்கு என்னவோ போலாயிற்று. என்ன?வென்பது போல் பார்த்தாள். இன்னும் இரண்டடி முன்னே வந்தார், அவளுக்கு மிக அருகில். அவளோ கொஞ்சம் பதறினாலும், புரியாமல் நின்றாள்.
"உனக்கு கண்டிப்பா உதவி செய்யறேன். கொஞ்சம் அந்த நிலைக்கண்ணாடியப் பார்", என்று அறைச் சுவரில் ஒரு பக்கமாய் இருந்த ஆளுயரக் கண்ணாடியைச் சுட்டிக் காட்டினார்.
புரியாமல் அவரைப் பார்த்தாள்; மீண்டும் அவர் அக்கண்ணாடியைக் காட்ட....மெல்ல நடந்து சென்று பார்த்தாள்; அதிர்ந்து போனாள். கலவரமாக இவரை நோக்கித் திரும்பியவள், அவர் தலைகுனிந்து கொண்டதைப் பார்த்ததும், ஏதோ புரிந்தும் புரியாமலும் அமைதியாய் நின்றாள்.
"குழந்தைக்காக....இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா?!"...மனம் வெதும்பினாள்.
அவள் இவரைப் பார்த்தபடி நிற்க, அசாத்திய அமைதி நிலவியது. அவரது குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க....அங்குமிங்கும் பார்த்து, பேச முயற்சி செய்தார்..... என்ன பேசுவது என்பதை விட, எப்படிப் பேசுவதெனத் தெரியாமல், கொஞ்சம் குழம்பினார்.
மீண்டும் அமைதி.
அவர் இன்னும் தலை குனிந்தே நின்றுகொண்டிருந்தார். கமலா அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தாள். அதிர்ச்சியிலிருந்து முற்றிலும் மீண்டார்ப்போல் தெரியவில்லை.
அமைதி.
சில நொடிகளுக்குப் பின்.....ஏதோ தெளிவு பிறந்தவராய்..... நிமிர்ந்தார். இவளது கண்களை நேராகப் பார்த்தார்.
"ஒரு நொடி காத்திரு".
உள்ளே சென்றார்; மீண்டும் வந்தார். கையில் 800 உரூபா பணம் இருந்தது. கொண்டு வந்து அவளருகில் இருந்த மேஜைமேல் வைத்தார்.
"இது குழந்தையோட மருத்துவ செலவுக்கு",கமலாவின் கண்களைப் பார்த்தவண்ணம் எவ்விதத் தயக்கமோ சலனமோ இல்லாமல் தெளிவாகச் சொன்னார்.
மீண்டும் இரண்டடி எடுத்துவைத்து கமலாவின் முன் வந்தார்; "இந்த மூக்குத்தி என் மனைவி மீனவுக்காக வாங்கினது."
திடீரென கமலாவின் இரண்டு கைகளையும் மெல்லப் பிடித்து, அவள் கரமிரண்டும் குவித்து வணங்குவதுபோல் பிடித்துக்கொண்டார் இவர் கரங்களால். இவரது குவிந்த இரு கரங்களுக்கு நடுவில், அவளது ஒன்றாய்க்குவிந்த கரங்கள். மேலும் ஓரடி முன்னே வந்தார்;இடைவெளி மிகக் குறைவாகவே இருந்தது; கமலா தலை தாழ்ந்து தரை நோக்கி அமைதியாக இருந்தாள். முன்னாள் வந்தவர், சிறிது குனிந்து அவளது விரல் நுனியில் முத்தமிட்டார். மெலிதாய் அதிர்ந்து அவர் முகம் பார்த்துவிட்டு, அடுத்த நொடி மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டாள்; ஆனால், எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை; கைகளை உருவிக்கொள்ளவுமில்லை. மௌனமாய் இருந்தாள்.
கோபால் ஐந்தாறு நொடிகளுக்குப் பின், கைகளை விட்டுவிட்டுப் பின்னே சென்று நின்றார்.
பின் யோசித்துப் பேசத்தொடங்கினார். "மன்னிக்கணும். கொஞ்சம் மனசு தடுமாறிடுத்து. உங்களோட கஷ்டகாலத்தை எனக்கு சாதகமாக்கிக்க விருப்பமில்லை. ஆனால், உங்களை நெருக்கத்தில் பாத்ததாலே.....கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துட்டேன். .....மன்னியுங்கோ."
கமலா அமைதியாகவே இருந்தாள்.
கோபால் தொடர்ந்தார், " இதோ இந்தப் பணத்தை எடுத்துக்கோங்கோ. இது என் தப்புக்கு தண்டனைப் பணமா நினைச்சுக்கோங்கோ. குழந்தையோட உயிரைக் காப்பாத்துங்கோ."
அவள் அமைதியாக இவரைப் பார்த்தாள்.
கோபால் புரிந்தவராய், " இல்லை....அந்த மூக்குத்தி உங்களுக்கான விலையில்லை. என்னோட மனைவியைத் தவிர, இன்னொரு பெண்மேலே நான் ஆசைப்பட்டது உங்களைப் பக்கத்திலே பார்த்ததும்தான். தவறான ஆசைதான். அதான் எல்லை தாண்டவில்லை. தவறு செய்ய விரும்பலை. ஆனா, அது அன்பா மாறவே கூடாதா?! அதோட அடையாளமா உங்ககிட்டேயே இருக்கட்டுமே. என் மனைவிக்கு இதைக் கொடுக்க முடியாது. புரிஞ்சுகோங்கோ தயவு செஞ்சு."
ஆரம்பத்தில் கொஞ்சம் அதிர்ச்சியில் இருந்தவள், பின்னர் குழந்தைக்காக எதற்கும் தயாராக இருந்தாள், கோபால் அதைத்தான் பணஉதவிக்கு மாற்றாக எதிர்பார்த்தாரோவென நினைத்து; பெரிதாக புரட்சி, சமூகசேவை என்று பேசும் இவரும் இப்படித்தான் என்றும் நினைத்துக்கொண்டாள்.
அனால் அவர் திடீரென்று விட்டு விலகி நின்றதோடு, உண்மையை ஒப்புக்கொண்டு, மன்னிப்புக் கேட்கும் தொனியில், தனக்குத்தானே தண்டனை கொடுத்துக்கொள்ளும் விதத்தில் பேசியதும், ஒரு கணம் குழப்பமும், மறுகணம் அவர்மேல் முன்பிருந்ததைவிட பன்மடங்கு மரியாதையும் கொண்டாள்.
சில நொடிகளுக்குப்பின் இருவருமே கொஞ்சம் சமாளித்து சாதாரண மனநிலைக்குத் திரும்பினர். சில கணங்களுக்கு முன், உணர்வுகளுக்கு இருவருமே கொஞ்சம் இடம்கொடுத்தது போல் இருந்தாலும், உடனே சுதாரித்துக் கொண்டனர்.
அவர் தலைகுனிந்து நின்று கொண்டே சொன்னார், " என்னை மன்னியுங்கோ, மீனா பிரசவத்துக்குப் போயிருக்கா; அதன் இந்தத் தடுமாற்றம்".
இவள் இப்போது அவரை கொஞ்சம் பரிதாபமாகப் பார்த்தாள்.
கோபால் அடுத்துச் சொன்னார், " நான் நல்லவனவே இருக்க விரும்புறேன், ஆனா நீங்க என் முன்னாலே நின்னுட்டு இருந்தா அது கஷ்டம்; நீங்க கிளம்புங்கோ; உங்களுக்கு வேற ஏதேனும் உதவி வேணுமான உங்க வீட்டுக்காரரை அனுப்பி வைக்கலாம்"; இன்னும் குற்ற உணர்ச்சியில் தவித்துத் தலைகுனிந்தே நின்று கொண்டு பேசினார்.
அவர் மேல் பரிதாபமும் மரியாதையும் இன்னும் கூடியது.
ஒரு கணம் தயங்கி நின்று யோசித்தாள். அடுத்து வெளியேறினாள், அவரைப் பார்த்துக்கொண்டே.
********************************************
கிட்டத்தட்ட 20 நாட்களுக்குப் பின்.......
ஞாயிற்றுக்கிழமை. காலை ஒன்பது மணியிருக்கும். இன்னும் தூக்கத்தில் இருந்தவர், யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்க, எழுந்துபோய் கதவு திறந்தார்.
மீண்டும் அவள்தான்- கமலா. இப்போது முகமும் உடையும் தெளிவாகத் திருத்தமாக இருந்தாலும், கவலையாய்த் தெரிந்தாள்.
அவளைக் கண்டதும், கொஞ்சம் பதறினார்; கேட்டார், " தனியாவா வந்தேள்; கூட யாரையாவது கூட்டி வந்திருக்கலாமே. வாங்கோ உள்ளே". பேசிக்கொண்டே உள்ளே அழைத்தார்.
"தனியாதான் வந்தேன்".
கோபால் ஞாபகமாக, "குழந்தைக்கு......??! " என்று இழுத்தார்.
"நல்லா இருக்கா".
"ரொம்ப சந்தோஷம்". நீங்க தனியா வந்ததும் பயந்துட்டேன், கொஞ்சம் அசடாகச் சிரிக்க முயற்சித்தார். அப்போதாதான் கவனித்து, " எங்கே....அந்த மூக்குத்தி....", சுருதி குறைத்துக் கேட்டார்.
அவள் சிலநொடிகள் அவரைக் கூர்ந்து பார்த்தாள். அவரோ, சங்கோஜத்தில் நெளிந்தார். உடனே சொன்னார், " உனக்காக கொடுத்ததுதான், நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அன்புக்கு அடையாளமாய் அதை அணிந்தே இருப்பாய் என்று நினைத்தேன்"
இப்போது அவள் முகத்தில் கவலை மறைந்து, குறும்பு கொப்பளித்தது. கமலா சொன்னாள், " இதோ!"
மேலும் சொன்னாள், " நீங்க கொடுத்த பணம் ரொம்பவே உதவியாய் இருந்தது. 300 செலவழிந்தது போக இதோ மிச்சம் ஐந்நூறு. பணத்தையும் எடுத்து மேஜைமேல் வைத்தாள்."
அவர் பரிதாபமாகப் பார்த்தார். சுய பரிதாபம்.
அவள் சிறுவயதில் ஐந்து, ஆறு வருடத்துக்கும் மேல், பரதநாட்டியம் கற்றுக் கொண்டாள். அதில் சிருங்கார ரசமும் வருமே. இன்று அவளுக்கு அது நன்றாகவே வந்தது. சிறிது நேரத்தில் அரங்கேற்றமும் நடந்து முடிந்தது. [அன்றுதான் மீனாளுக்குக் குழந்தையும்(அனந்தசயனம்) பிறந்தது.]
கமலாவுக்கு 'பிள்ளை கொடுத்தவன் கணவன் என்றால், அப்பிள்ளையின் உயிரைக் காத்துக் கொடுத்தவன், கணவனாக அல்ல....கண்கண்ட தெய்வமாகத் தோன்றினான். கோபால், ஐயங்காராயிற்றே! அவருக்கு சேவை செய்வது, தெய்வத்துக்கே சேவை செய்வதுபோல்தானே!', என்று பலவாறு காரணம் கற்பித்துக் கொண்டாள்.
கர்ணன் கூட தன் கவசகுண்டலத்தையே கொடுத்தானே கடவுளுக்கு! இவள் கோபாலுக்குத் தன்னையே கொடுத்தாள்.
அனால் கோபால்தான், ஒரே முறை அந்த அரங்கேற்றத்தை நடத்தியபின், குற்றவுணர்ச்சியில் தவித்தார். முழு விசயத்தையும், அந்த வருட டைரியில் எழுதி வைத்தார். அந்தக் குற்றஉணர்ச்சி அவரைக் குடிகாரராக்கியது.
கமலாவுக்கோ 'அந்த' விசயம், தனது மகளைக் காப்பாற்றிய தெய்வத்துக்குக் கொடுத்த காணிக்கை.
மீனாவுக்கு அவர் எப்போதுமே வாழ்வு கொடுத்த தெய்வம்தான்.
சமூகத்தின் முன்னிலையில் அவர் தங்கமான பெரியமனிதர்தான்.
கோபாலுக்கு மீனாவும், கமலாவும் தேவதைகள்தான். அவரது குறையை, தெரிந்தோ தெரியாமலோ, முழுமனதோடு ஏற்றுக்கொண்டவர்களல்லவா!
ஆனாலும் அவரது மனசாட்சி மட்டும் அவரைக் 'குற்றவாளி' என்றே கொன்றது. தன் மனைவி மீனாவுக்கும் துரோகம் செய்ததாய், ஒரு நல்லபெண் கமலாவின் வாழ்க்கையையும் கெடுத்துவிட்டதாய் எண்ணி எண்ணி மருவினார்.
அதை மறக்கத்தான் குடிக்கு அடிமையாகிப் போனார். அவரது குடிக்குக் காரணம் தெரியாத மீனா அவரது கவலையைப் போக்கத் தனக்குத் தெரிந்த அத்தனையும் செய்து பார்த்தாள். காலம் சிட்டாகப் பறந்தது.
பின்னர் அவர்கள் தென்னாற்காட்டு ஜில்லாவிலே இருந்தனர். இருவருக்கும் பங்களா ஊருக்கு வெளியிலே.
இரவு பத்துமணிக்கு மேல் அப்பக்கம் யாரவது போனால், கலெக்டர் தம்பதிகளின் சல்லாப வார்த்தைகளைக் கேட்கலாம்.
மீனாளின் 'டிரியோ, டிரியோ' பாட்டில், கோபாலய்யங்காருக்குப் பிரியமதிகம்.
அவளோடு சேர்ந்து தெம்மாங்கு பாடுகையில் அவரது மனதுக்கு ஒரு ஆறுதல், 'தானும் ஒரு சாதாரண மனிதன்தான், தானும் தவறு செய்தவன்தான்; சாதாரண மனிதனான தன்னைக் கடவுளாய் நினைக்கும் மீனாவுக்கும், கமலாவுக்கும் அவர் மானசீகமாய் நன்றி' சொல்வார் மனதிற்குள்ளேயே.
ஆனால் இந்த உண்மையெல்லாம் யாருக்கும் தெரியாதே.
இது தெரியாத எழுத்தாளன் ஒருவன், கோபாலின் குடிக்கு வேறு காரணம் சொல்லிக் கதையும் எழுதினான்.
சொல்ல மறந்துவிட்டேனே; அந்த எழுத்தாளன் வேறுயாருமல்ல. கமலாவின் கணவன்தான். அவனுக்குத் தெரிந்தது கோபாலன் குடிப்பது; கதை கட்டினான். தெரியாதது?
அவனைப் பெரிய எழுத்தாளன் என்று கொண்டாடவும் இந்த முட்டாள்ச் சமூகத்தில் சில பிறவிகள் இருந்தன; அவன் எழுத்தே புதுமையாம்; பித்தன்.