Wednesday, December 22, 2010

நூறாம் மலர்...

நமக்கு தமிழறிவு குறைவுதான் என்றாலும்.... தமிழ்ப் பற்று நிறைய உண்டு... அந்த ஆர்வத்தில் சில சமயங்களில் இன்டர்நெட்டிலும் புத்தகங்களிலும் மேய்வது உண்டு-நுனிப்புல்தான். அப்படி ஒரு சமயம் இங்கே ஒரு வலைதளத்தில் பூக்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று கண்டேன்....சில blogspots ஆக இருக்கலாம்.....எனக்கு சரியாக நினைவில்லை....இன்னொரு தளத்தில் கலைஞர் அவர்களின் கவிதை ஒன்று என் கண்ணில் பட்டது.அந்த தளத்தின் பெயரும் நினைவில் இல்லை... கலைஞர் அவர்களின் கவிதையில் பழந்தமிழர் அறிந்திருந்த மலர்களின் பெயர்களைக் கொண்டு கபிலர் பாடிய பாடலின் எளியநடை இடம்பெற்று இருந்தது. அதைப்பார்த்ததும் அந்தப் பெயர்களனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ளும் ஆசை பிறந்தது...பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிகர் சூர்யா அந்த 99 மலர்களின் பெயர்களைச்சொல்லும் காட்சி நினைவில் வந்தது. ஆனாலும் அனைத்துப் பூக்களின் பெயர்கள் மட்டும் தெளிவாக
கிடைக்கவில்லை....

அது ஒரு புறமிருக்க... சமீபத்தில் மதுரையில் ஒரு புத்தகக் கண்காட்சியில் ஒரு புத்தகம் கிடைத்தது.... "வகைமை நோக்கில்....தமிழ் இலக்கிய வரலாறு "-முனைவர் பாக்கியமேரி.
அந்தப் புத்தகத்திலும் ஒரு நாள் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கையில்...மீண்டும் அதே பூக்களின் பட்டியல்....

பண்டைய தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என்று ஒரு பாடல் தொகுதி. அதில் ஒரு பாட்டு கபிலரின் குறிஞ்சிப் பாட்டு.ஒரு பாட்டு என்றால் ஒன்றே ஒன்று அல்ல.....பல சிறு பாடல்களின் தொகுப்பு... அனால் அந்த பாடல்கள் அனைத்திற்கும் ஒரு தெளிவான பின்புலம், theme, அடிப்படை ஒற்றுமைகள் உண்டு.... பெயருக்கேற்றாற்போல் குறிஞ்சிப் பாட்டு என்றால்.....குறிஞ்சி நிலத்தை முன்னிலைப்படுத்திப் பாடப்படும் பாடல்களைக் கொண்டது என்பது தெளிவாகவே புரியும்... குறிஞ்சி நிலத்திற்குரிய சிறப்புகளை முன்னிலைப்படுத்திப் பாடப்பட்டிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.அதாவது....அந்நிலத்திற்குரிய கருப்பொருள், முதற்பொருள், உரிப்பொருள், திணை ஒழுக்கம் முதலியவை பற்றிய குறிப்புகள் அடங்கி இருக்கும். அந்நிலத்தின் அன்றாட நிகழ்வுகள்கூட சிறப்பிடம் பெற்றிருக்கும். நம்மை பழந்தமிழ் நிலச் சிறப்புகள் அனைத்தும் கவர்ந்தாலும், கபிலரின் தேன் போன்ற அந்தப் பாடலில் வரும் பூக்களின் பெயர்த்தொகுப்பு நம்மை வண்டாக்கி விட்டது என்றே சொல்லலாம்.

அந்த நூறு மலர்களின் பட்டியல் இதோ..
1.செங்காந்தள்
2.ஆம்பல்
3.அனிச்சம்
4.செங்கழுநீர்
5.குறிஞ்சி
6.வெட்சி
7.செங்கோடுவேரி
8.தேமா
9.செம்மணி
1௦.பெருமூங்கில்

11.கூவிளம்( வில்வம்)
12.எறுழம்
13.மராமரம்
14.கூவிரம்
15.வடவனம்
16.வாகை
17.வெட்பாலை
18.பைஞ்சாய்க் கோரை
19.வெண்காக்கணம்
20.கருவிளம்

21.பயனி
22.வானி
23. குரவம்
24.பச்சிலை
25.மகிழம்
26.காயா
27.ஆவிரை
28.சிறுமூங்கில்
29.சூறை
30.சிறுபூளை

31.குன்றி
32.முருக்கிளை
33.கோங்கம்
34.மருதம்
35.பேரங்கம்( மாஞ்சாடி)
36.திலகம்
37.பாதிரி
38.செருந்தி
39.அதிரல்( புனலி)
40.சண்பகம்

41.கரந்தை
42.குளவி
43.மா
44.தில்லை
45.பாலை
46.முல்லை
47.குல்லை
48.பிடவம்
49.சிறுமாரோடம் (செங்கருங்காலி)
50.வாழை

51.வள்ளி
52.நெய்தல்
53.தாழை
54.தளவம்( செம்முல்லை)
55.தாமரை
56.ஞாழல்
57.மௌவல்
58.கொகுடி
59.சேடல்
60.செம்மல்(சாதி)

61.குரலி
62.கோடல்(வெண்காந்தள்)
63.கைதை(தாழை)
64.சுரபுன்னை
65.காஞ்சி
66.குவளை
67.பாங்கர்(ஓமை)
68.மராஅம்(மரவம்)
69.தணக்கம்
70.ஈங்கை(இண்டம்)

71.இலவம்
72.கொன்றை
73.அடுப்பம்
74.ஆத்தி
75.அவரை
76.பகன்றை
77.பலாசம்
78.பிண்டி(அசோகம்)
79 .வஞ்சி
80.பித்திகம்(பிச்சி)

81.சிந்துவாரம்(கருநொச்சி)
82.தும்பை
83.பித்திகம்(திருத்துழாய்)
84.சிந்துவாரம்(தோன்றி)
85.நந்தி(நந்தியாவட்டம்)
86.நறவம்
87.புன்னாகம்
88.பாரம்(பருத்தி)
89.பீரம்(பீர்க்கம்)
90.குருக்கத்தி(மாதவி)

91.ஆறாம்(சந்தனம்)
92.காழ்வை(அகில்)
93.புன்னை(பெரும்புன்னை)
94.நரந்தம்(நாரத்தம்)
95.நாகம்
96.நல்லிருள்நாரி(இருவாட்சி-இருள் வாசி-இருள் ஆட்சி)
97.குருந்தம்
98.வேங்கை
99.புழக்கம்(எருக்கம்)

கபிலர் பாடலில் 99 மலர்கள் இடம்பெற்று இருந்தாலும், 100 என்று இல்லாமல் இருப்பது பெயர்ப் பட்டியல் முழுமை பெறாதது போல் ஒரு உணர்வைத் தருகிறது. அதோடு....எனக்கென்னவோ அவரது காலத்தில் பஞ்சம் வந்ததோ என்று கூட எண்ணத் தோன்றியது....


பட்டியலை முழுமை செய்ய, கவிஞர் கபிலரின் கண்ணில் படா மலரொன்று என் கண்ணில் பட்டதே அப்படி எண்ணச் செய்தது என்பதோடு....என்னவளுக்காக நான் காத்திருக்கும் இந்த 3 ஆண்டுகள் பெரிய வியப்பு என்ற எண்ணமும் உடைந்தது. ஈராயிரம் ஆண்டுகளாக ஒரு அழகிய தமிழ்ப் பாடலொன்று இவளது பெயர் சேரக் காத்திருந்ததென்றால்..., 'ஈராயிரம் ஆண்டுகளாக, ஒரு குறையுமற்ற, அழகிய பூக்களின் கூட்டமொன்று உனக்காக தவம் செய்தது என்றால்....சாதாரணமான நான் காத்திருக்கும் இந்த மூன்று ஆண்டுகள்.... கணக்கிலே வராதோ கண்மணியே?!'

தேனெடுக்கும் ஈக்களுக்கு ராணி உண்டென்றால்,
தேன் கொடுக்கும் பூக்களுக்கும் ராணி?! 

100 .மலர்விழி.

No comments: