நேற்றிரவு கையில் கிடைத்த ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்டுக் கவனத்தையும் கருத்தையும் கவர்ந்த ஒரு செய்தி, இந்தப் பதிவில்.....
பாப்பம்மாள் புரம், ஆண்டிபட்டி.
rv.மோகன், அன்புநிதி, யுகநாதன், அசோக், ஆனந்தன், நான் மற்றும் பலரும் 1993-94ல் ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தோம் தேனியில்; ஆண்டிபட்டி, பாப்பம்மாள் புரத்திலிருந்து தினமும் காலை 8 மணிக்கு 'ஆண்டிபட்டி-outer' பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்து பெரும்பாலும் MAKயில், தவறினால் ராஜலக்ஷ்மியிலோ, அதுவும் தவறினால் ஏதோ ஒரு பாண்டியனிலோ ராணி-மங்கம்மாளிலோ பயணம் செய்து தேனி சென்று படித்துவந்த காலம்.
இப்போது அங்கு புதிதாய் வீடுகள் பல வந்துவிட்டன; ஆனால் அப்போது இத்தனை வீடுகள் நெருக்கமாக இல்லை.நாங்கள் இருந்த வீட்டின் பின்புறத்திலிருந்து வேறொருவரின் விவசாய நிலம் தொடங்கிவிடும்; விவசாயமும் நன்றாகவே நடந்து வந்தது; இப்போது வெறும் தென்னந்தோப்பு மட்டுமே அங்கு உள்ளது. வீட்டுக்கு மேல்புறமும் வெற்றுநிலமாகவே இருந்தது.
அந்த வெற்றுநிலத்தின் பரப்பு சற்றே அதிகம்தான்; கிட்டத்தட்ட மூன்று, நான்கு கால்பந்து மைதானம் நீளவாட்டத்தில் அமையும் அளவுக்கு பரந்து விரிந்த வெற்றுநிலம்.
அந்த நிலத்திலும், வீட்டை ஒட்டி இருந்த சிறு துண்டுநிலம் கொஞ்சம் புற்களும், சிறு கோரைகளும் கொண்டு தரிசாகவே இருந்தது. சிலசமயம் எங்களுக்குக் கிரிக்கெட் மைதானமாகவும், சில நேரங்களில் பம்பரம் விட்டுப் பழகவும் உபயோகப்பட்டது. கோடைக்காலங்களில் அந்தச் சிறு புற்களும்கூடக் கருகிப்போய் சருகாகிவிடும். அதைத் தொடர்ந்துவரும் மழைக்காலத்திலும் குளிர்காலத்திலும் அவை சற்றே மீண்டும் தலைதூக்கும்.
எங்களது இந்த விளையாட்டு மைதானத் துண்டுநிலத்தை அடுத்து, சற்று அதிக நீளத்துக்கு, சிறு குத்துச்செடிகளும், சிறு புதர்களும், குறிஞ்சிச் செடிகளும், துளசிகளும், அரிதாக கருவேலஞ்செடிகளும் இன்னும் எனக்குப் பெயர் தெரியாதத பலவகைச் செடிகளும் கலந்து கிடந்தன. அதைத் தாண்டினால், ஒருகாலத்தில் சிருநீரோடையாக இருந்து இப்போது கால்வாயாக மாறிவிட்ட ஒரு நீரோட்டத்தைக் கட்டுக்குள் வைக்க எத்தனையோ வருடங்களுக்குமுன் கோலப்பட்ட கரை ஒன்று தூர்ந்துபோய் வெறும் மண்மேடாகக் காட்சிதரும். அந்த மண்மேட்டில், சில புளியமரங்களும், இலவ மரங்களும், அவைகளினூடே சில பெரிய கருவேல மரங்களும் அணிவகுத்து, வரிசையாகவும் சில இடங்களில் கலந்தும் நின்றிருக்கும்.
அங்கு அணில்கள் மிக அதிகமாகவே ஓடித்திரியும்.
இருபது வருடங்களுக்கு முன்பு, இதே போன்ற பருவகாலத்தில், குளிர்காலம் முடிந்து, முன்பனிக் காலம் பிறக்கும் பருவத்தில், அந்த இடம் பசுமை நிறைந்து தெரியும்.
புற்களும், சிறு செடிகளும், மரங்களின் மேல் படர்ந்து வளரும் கொவ்வைக் கொடிகளும், ஆங்காங்கே தென்படும் வேப்பமரங்களும், அத்தனை தாவரங்களும் தழைத்துத் துளிர் விட்டு, பச்சைப் பசேலென்று தெரியும். சில செடிகள் இளம்பச்சையாகவும், சில கரும்பச்சை வண்ணத்திலும் மிக உயிரோட்டத்துடன் இருக்கும். தரையில் கோரைகளும், அருகுகளும் செழித்து வளரத்தொடங்கி இருக்கும். அதுவரை காய்ந்து மெல்லிய பழுப்பும் வெளிறிய மஞ்சளும், சாம்பல் வண்ணத்தில் தெரியும் கரிசலும் நிறைந்து தெரிந்த தரையில், முன்பனி தொடங்கும் காலத்தில், வெறும் ஒற்றையடிப்பாதை மட்டுமே சிறிது தெரியும்; மீந்த பரப்பு அனைத்தும் பசுமை நிறைந்து இருக்கும். சூரியன் உச்சிக்கு வரும் இரண்டொரு மணிநேரமே கொஞ்சம் மெலிதான, இதமான வெப்பம் தெரியும்; மற்ற நேரங்களில் வானமும், வீசும் காற்றும் மந்தாரமாகக் குளிர் நிரம்பியே இருக்கும்.
அப்படிப்பட்ட காலங்களில்.....பம்பரம் விடுவது ஒருபுறம் இருந்தாலும்.......அந்தப் பச்சை மைதானத்தில் திடீரென்று சிறுவர் கூட்டம் படையெடுத்து மொய்க்கும். தேன்கூட்டில் தேனீக்கள் சென்று சேர்வது போல், கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவை வைத்துக்கொண்டு ஒரு சிறுவனோ/சிறுமியோ பின்னால்வர, இன்னொரு சிறுவனோ/சிறுமியோ, கையில் நான்கைந்து தும்பைச் செடிகளைச் சேர்த்து, ஒரே கொத்தாகப் பிடித்துக்கொண்டு முன்னால் போவார்கள். இருவர் இருவராகச் சேர்ந்தே திரிவர். நானும் என் தம்பியும்கூட அவ்வாறே திரிந்தோம்.
தும்பைப் பூக்கள் பூத்திருக்க, அவற்றில் மதுரம் எடுக்க வண்ணத்துப் பூச்சிகள் அந்த மைதானம் முழுக்க நிறைந்து, சுற்றிச் சுற்றிப் பறந்து திரியும். அவற்றின் பின்னே, அவைகளைப் பிடிக்க நாங்கள் திரிந்தோம்.
வண்ணத்துப் பூச்சிகள் தேன்குடிக்க அமர்ந்த சில நொடிகளுக்குப் பின், பின்புறமிருந்து மெதுவாக, அதிராமல் மெல்ல நடந்து சென்று, அதிக அழுத்தம் கொடுக்காமல் அதேநேரம் அந்த வண்ணத்துப் பூச்சி பறந்தும் விடாமல், சரியான வேகத்தில் கையிலிருக்கும் தும்பைக் கொத்தினால் படக்கென்று அந்த வண்ணத்துப் பூச்சிகளை மூடிவிடவேண்டும். பின் அந்தக் கொத்தின் வெளிப்புறத்திலிருந்து ஒவ்வொரு தும்பைக்கிளையாக மெதுவாக எடுத்துக்கொண்டே போனால், அதன் அடிப்புறம் சிறைப் பட்டிருக்கும் வண்ணத்துப் பூச்சி கையில் சிக்கும். அதை உடனே பின்னாலிருக்கும் சிறுவன் பிளாஸ்டிக் பையிலோ, டப்பாவிலோ போட்டு அடைத்துவிடுவான்; அதைத்தொடர்ந்து உடனே, அடுத்த பட்டாம்பூச்சியைத் துரத்த வேண்டும். இது போலப் பலரும், இருவர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, பல அணிகளாகப் போட்டி போட்டுப் பிடிப்பர். அந்தப் போட்டியில் அதிகம் யார் வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்திருக்கிறார்களோ அவரே அன்றைய போட்டியில் வெற்றி பெற்றவர்.
சிறுவயதில் எமக்கு வேடிக்கை, விளையாட்டாய்த் தெரிந்தது, இப்போதோ பட்டாம்பூச்சியின் வேதனையாய்த் தெரிகிறது. எவ்வளவுதான் கவனமாக, அப்பட்டாம்பூச்சிகளுக்கு எந்த ஆபத்தும் நேராமல் பிடிக்க முயற்சி செய்தாலும், சிலவற்றுக்கு இறகு உடைந்துபோவதுண்டு. அதற்குமேலும்....அவைகளின் சுதந்திரம்?! இறகிருந்தும் சிறையில்!
அறியாப்பருவத்துத் தவறுகள் :-(
என் கையில் சிக்கிய புத்தகம், இந்தப் பள்ளிக்கால நினைவுகளைக் கிளறிவிட்டது. அதில் இரண்டு பக்கச் செய்தி-வண்ணத்துப் பூச்சிகள் பற்றி.
சுருக்கமாக....
சாதாரணமாக நாம் பார்க்கும் பட்டாம்பூச்சிகள்
"சிறகடித்துப்(flapping)" பறக்கும். ஆனால் மழைக்காடுகளில் ஒருவகைப் பட்டாம்பூச்சிகள் தரையை ஓட்டிப் பறக்கும்போது....பறப்பதில்லையாம்!!!!?
அவ்வகைப் (haeterini) பட்டாம்பூச்சிகள் தரையை ஒட்டி, 5 அங்குல உயரத்திலோ அதற்குக் குறைவாகவோ பறக்கும்போது....
சிறகை மேலும் கீழும் அடித்துப் பறப்பதில்லையாம். மாறாகக் காற்றிலே
சறுக்கி/வழுக்கி (gliding) "சிறகடிக்காமல்",
மிதப்பதுபோல் பறக்கின்றனவாம்.
கேள்விப்பட்டதுண்டா? "சிறகடிக்காமல்" பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள்!?
5 அங்குல உயரத்திற்கு மேலே பறக்கும்போது, அவை மற்ற பட்டாம்பூச்சிகளைப்போல் சிறகடித்தே பறக்கின்றனவாம். ஆனால் மற்ற பட்டாம்பூசிகளால் அவ்வாறு வழுக்கி/சறுக்கிப் பறக்க முடியுமா?!
முடியாதாம்!
அப்படியென்ன அந்தவகைப் பட்டாம்பூச்சியின் சிறப்பு?
சராசரியைவிட சற்றே நீளமான முன்னிறக்கைகள்! அதோடு, தரையை ஓட்டிப் பறக்கும்போது,(பொதுவாக சிறகுகள் சமதளத்திற்கு அருகே இருக்கையில்) எளிதாகப் பறக்கத் துணைசெய்யும் மேல்தூக்குவிசை(lift) அதிகமாகவும், பறப்பதற்குத் தடையாகும் பின்னிழுவிசை(drag) குறைவாகவும் இருக்குமாம்.
இந்தச் சிறப்புதான், தரையருகே காற்றிலே வழுக்கி/சறுக்கிச் செல்லத் துணைசெய்கிறதாம்.
நன்றி: national geographic, january-2016.
* சராசரியாகப் பட்டாம் பூச்சிகளின் மொத்த வாழ்நாள் ஒரு மாதகாலம்தானாம். :-(
* பட்டாம்பூச்சிகளுக்குக் கண்ணிமை இல்லையாம்; அதானால் தூங்கும்போதும் கண்மூடாமலேயே தூங்குமாம்.
* அவைகளுக்குச் சூரிய ஒளியிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் வெப்பம் உயிரோடிருக்க மிகமுக்கியமாம்.
* சிறகடிப்பது பறக்க மட்டுமின்றி செய்திப் பரிமாற்றத்துக்கும் உதவுமாம்.
*பட்டாம்பூச்சிகளின் உடலமைப்பு அந்துப்பூச்சிகளை விட ஒல்லியாகவும், நீளமாகவும், உடலில் முடி குறைவாகவும் இருக்குமாம்.
*அந்துப்பூச்சிகளைவிட வண்ணங்கள் மிகுந்து இருக்குமாம்.
*அந்துப்பூச்சிகள் இரவில் உணவுதேடுமாம்; பட்டாம்பூச்சிகளோ பகலில்.