Tuesday, December 20, 2016

களவும் கற்று மற....!

களவு என்ற வார்த்தைக்கு இன்று கற்பிக்கப்படும், புரிந்துகொள்ளப்படும் பொருள், அர்த்தம்....திருட்டு; பிறர்க்குரிய ஏதோ ஒரு பொருளை யாரும் அறியாவண்ணம் தான் எடுத்துக்கொள்வது.

ஆனால், சங்ககாலம், களவு என்ற வார்த்தையை காதல் என்ற பொருளிலும் கையாண்டு இருக்கிறது. அதை விளக்கப் பிறந்த பழமொழிதான், களவும் கற்று மற.

களவென்பது பிறர் அறியாவண்ணம் தலைவனும் தலைவியும் சந்தித்துக் கொள்ளும், காதல்வாழ்வின் ஆரம்பகாலத்தை, முற்பாதியைக் குறித்தது.

கற்பென்பது பிறர் அறிய, தலைவனும் தலைவியும், மணம் செய்துகொண்டு, ஒன்றாய்வாழும், குடும்பவாழ்வை, காதல்வாழ்வின் பிற்பாதியைக் குறித்தது.

களவும் கற்று மற என்றால், `ஊரறியாமல் நடக்கும் காதலின் முற்பாதி நடக்கவும் வேண்டும், அனால் விரைவில் அதைத் தாண்டி, மறந்து, கற்பு வாழ்வில், ஈடுபடவும் வேண்டும்' என்ற பொருளைக் குறிக்கவே வந்தது.

`கற்பெனப்படும் குடும்பவாழ்வு, களவெனப்படும் காதல்வாழ்விலேயே தொடங்கவேண்டும். அந்தக் களவும் சிலகாலத்தில் மறக்கப்பட்டு, கற்பெனப்படும் குடும்பவாழ்வு விரைவில் தொடங்கவேண்டும்' என்பதே அந்தப் பழமொழியின் பொருள்.

இப்படி காதல்வழிப்பட்ட குடும்ப வாழ்வை அடிப்படையாய்க் கொண்டு அமைந்தது சங்ககாலத் தமிழ்ச்சமூகம்.

ஆனால்....அதே தமிழ்ச் சமூகம், காதல் என்பதையே கொச்சையான ஒன்றாகப் பார்ப்பது..... காதலைப் பற்றியோ, பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் அகப்பொருள் வாழ்க்கைமுறை பற்றியோ, அதற்கான உன்னதமான அடிப்படை பற்றியோ..... ஏதுமே அறியாமல்போனதன் விளைவே.

பொய்யான காதலின் பெயரில் நடக்கும் தவறுகளுக்கு..... உண்மையான காதலோ, காதலர்களோ பொறுப்பாக முடியுமா?! அவர்களைப் பழிப்பதுதான் முறையா!?

காதலை, அன்பை அடிப்படையாகக் கொண்டுதான் இல்வாழ்க்கை அமையவேண்டும் என்று 2000 வருடங்களுக்கு முன்பே வலியுறுத்திய அதே  தமிழ்ச் சமூகம், அத்தகைய வாழ்வின் மேன்மையைப் பற்றி முற்றிலும் மறந்துவிட்டு, இயற்கையாய் அன்புபிறக்காத இருவரை இல்வாழ்வில் சேர்த்துவைப்பது.......சாதியத் திருமணங்களின் வெளிப்பாடுதான்; சாதியைக் காப்பாற்றும் முயற்சியின் வெளிப்பாடுதான்.

களவு:
களவு வாழ்க்கை தொடங்கும் விதம் எப்படி என்பதை...... அகப்பொருள் பாடல்கள் மிக அருமையாக, காட்சிகளைக் கொண்டு விளக்கும்.  களவின் முதல்முதல் தொடக்கம்..... மிகத் தற்செயலாக நடக்கக்கூடியது.

தலைவியை தலைவன் முதல்முதலாய்க் காண்பது.....  காட்சி.

தான் காண்பது, " தேவதையோ , மயிலோ, மானிடப்பெண்ணோ....?!" என தலைவன் குழம்புவது.... ஐயம். *

தன் எதிரே இருப்பது ' மனிதப் பெண்தான்' என்று அவளது உடல்மொழி கண்டு உறுதிப்படுத்துவது.... தெளிதல். (உடல்மொழி - கண் சிமிட்டல், கால் தரையில் படுதல்)

`தலைவிக்கும் தன்மேல் விருப்பம் உள்ளது, அவளுக்கும் தன்காதலில் சம்மதம் உள்ளது' என்பதைத் தலைவன் தெரிந்துகொள்வது.... தேறல்.

இயற்கையாகப் பிறக்கும் உண்மைக்காதலின் தொடக்கம், இவ்வாறே அமையும்.

*அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
   மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

இதோடு நின்றுவிடுவதில்லையே அகப்பொருள். மேலும் பின்னால் ஒருநாள்......

நன்றி.

No comments: