Friday, February 11, 2011

குறுந்தொகையில்...2


 "என் தாயும் உன் தாயும் யார் யாரோ! ஒருவரை ஒருவர் அறியார்.
   என் தந்தையும் உன் தந்தையும் எவ்விதத்திலும் உறவினர் அல்லர்.
   நானும் நீயும் ஒருவரை ஒருவர் இதுவரை பார்த்ததில்லை, சந்தித்ததில்லை.
   ஆனாலும்....
   கோடை வெப்பத்தால் காய்ந்து புழுதியாகிப்போன செந்நிற நிலத்திலே பெய்த மழை                                போல,
   நம் இருவரது அன்புள்ளமும் கலந்ததே நமது காதல் வாழ்வு." 

              இப்பாடலின் நேரடிப் பொருள் விளக்கம் எளிதானதே. ஆனால் அது நேராகக் குறிப்பிடாமல் குறிப்பால் உணர்த்தப்படும் பொருள் பல பொதிந்து இருப்பதை சாமி.சிதம்பரனாரின் விளக்கம் தெளிவுபடுத்தியது.
              குறிஞ்சி நிலமோ முல்லை நிலமோ.... எங்கோ ஒரு தனித்த இடத்தில் காதல் தலைவியும் தலைவனும் சந்திக்க நேரிடுகிறது. வழக்கமாக இலக்கியத்தில் வரும் காட்சிகளைக்கூட நாம் கற்பனை செய்து கொள்ளலாம். நீரெடுக்கச் சென்ற பெண்ணையோ...அல்லது நீராடவோ அல்லது மலர் பறிக்கவோ...அல்லது விறகெடுக்கவோ ... அல்லது தோழியருடன் காற்று வாங்கவோ... விளையாடவோ தலைவி ஊரைவிட்டு வெளியே வர நேர்கிறது... அங்கு அவளைத் தலைவன் காண்கிறான். இருவரும் முதன்முறையாக ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடுகிறது. காட்டுக்கு வேட்டையாட வந்த பக்கத்து ஊர்க் காரனாக இருக்கலாம் தலைவன்.
தற்செயலாகத் தலைவியைச் சந்திக்க நேர்கிறது. கண்டதும் காதல் கொள்கிறான் தலைவன். தலைவிக்கும் தலைவனிடம் விருப்பமிருப்பது தெரிகிறது. ஆனாலும் பிடிகொடுத்துப் பேச மறுக்கிறாள். தன் மேல் நம்பிக்கை வரவில்லையோவெனத் தலைவன் சிந்திக்கிறான். அவளது அச்சத்தை அறிந்து, அதன் காரணத்தையும், அவள் பக்கமுள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு, அவளது அச்சத்தைப் போக்கும் விதமாக, தலைவன் கூற்றாக இப்பாடலை அமைத்துள்ளார் புலவர்.

                காதலரின் தாய் தந்தையர் ஒருவரை ஒருவர் அறியார். காதலருக்கும் இதுவே முதற்சந்திப்பு. ஆனாலும் ஒருவர் மேல் ஒருவர் விருப்பமும் அன்பும் கொண்டு மணம் செய்துகொள்ள முடிவு செய்கின்றனர். தலைவன் தலைவிமேல் கொண்ட காதல் எப்படிப் பட்டதென்றால், நீண்ட கொடைவேப்பத்தால் வறண்டு வெடித்துப்போன...அல்லது புழுதியாகக் கூட மாறிப்போன செம்மண் நிலத்திலே கோடைமழை பெய்ய, மழைநீர் சிறு வெள்ளமாக மாறி ஓடுகிறது.
                  "பெய்யும்போது நிறமற்று இருக்கும் மழைநீர், காய்ந்த செம்மண் நிலத்திலே விழுந்ததும், தன் இயல்பை மாற்றிக்கொண்டு, தன் இயல்பையே இழந்து, எச்செம்மண் நிலத்தில் வீழ்ந்ததோ அச்செம்மண்ணின் நிறத்தைப் பெறுகிறது. நானும் அந்த மழைநீர் போல, எப்போது உன்னைக்கண்டேனோ அப்போதே என்னை முற்றிலும் உன்னிடம் இழந்துவிட்டேன். அந்த நிலமும் மழைநீரும் போல நம் இதயங்களும் கலந்துவிட்டன. எனவே நம் காதல்மேல் சந்தேகம் கொண்டு வருந்தவேண்டாம்." என்று தலைவன் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது பாடல். சங்கத்தமிழரின் காதலறம் கூறும் கவிதை வரிகள் இவை.
                  காதலில் தன்னையே இழப்பதுதான் மிகச்சிறந்த உண்மையான காதலாக இருக்கும். தன் தனித்துவம், தன் தனிப்பட்ட சிந்தனை, தன்னைப் பற்றிய தன் நலன் பற்றிய சிந்தனைகள் இவை அனைத்தும் கடுகளவும் காதலரின் சிந்தனையில் தோன்றாமலே போய்விடுவதுதான் சிறந்த காதலாக இருக்கும். மழைநீர் தன் இயற்கைக் குணத்தை இழப்பதாகக் காட்டப்பட்டுள்ளது காதலின் சிறப்பைத் தெளிவுபடுத்தவே.

                இதே போன்ற, தன்னைப் பற்றிய சுய நினைவையே இழக்க வைத்துவிடும் காதற்காட்சி ஒன்று ஆங்கில இலக்கியத்திலும் கண்டேன்.

ரோமியோ - ஜூலியட்டில் ஒரு காட்சி.

காதலில் தனைமறந்த நிலையில் காதலர் இருவரும் பேசிக்கொள்ளும் காட்சி இது.
http://neidhal.blogspot.com/2011/02/3-romeo-juliet.html

நன்றி: புகைப்படமும் ஓவியமும் தந்தோருக்கு.

3 comments:

jega said...
This comment has been removed by the author.
jega said...

ஒரே நேரத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையா? தாங்கள் கலக்குகிறீர்கள் போங்க...

m.rajaguru said...

ada pannai.... yaedho TR-oda paattula shakespeareoda touch therinjudhaenu compare panninaendaa.... try pannuvomae... vandhaa malai...ponaaaaa...... :-) ;-)